அர்த்தம் நிறைந்த முதியோர் தினக் கொண்டாட்டம்

🕔 October 1, 2015

Elderly day - 03

 

– ஆசிரியர் கருத்து –

ர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் ஆகியவற்றினை அனுஷ்டிக்கும் வகையிலான நிகழ்வுகள், இன்று வியாழக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிகழ்வுகளை நடத்துகின்றவர்களில் அதிகமானோர், தமது மேல் அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், வெறும் கண்துடைப்புகளுக்காகவுமே இந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

சிறுவர் தினத்தை அனுஷ்டித்தல் எனும் பெயரில், பாடசாலையிலுள்ள மாணவர்களை வருத்தி, ஊர்வலமாக வெயிலில் அழைத்துச் சென்று அலைய வைப்பதால் எதுவும் ஆகி விடப் போவதில்லை. அதேபோன்று, முதியோர் தின நிகழ்வு என்று சொல்லி, வயதானவர்களை அலுவலகங்களுக்கு அழைத்து வந்து, அவர்களை மிக நீண்ட நேரமாக காக்க வைத்து, வெறும் உரைகளை நிகழ்த்துவதால் முதியோர்களுக்கு எதுவித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை.

எனவே, இவ்வாறான கண்துடைப்புகளுக்கப்பால் அர்த்தபுஷ்டியான சிறுவர் மற்றும் முதியோர் தினங்களைக் கொண்டாடுதலே பிரயோசமானதாக அமையும்.

அந்த வகையில், மஸ்கெலியா சென். ஜோசப் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் என – அனைவரும் ஒன்றிணைந்து, விசேடமான முறையில், இன்றைய தினம் அர்த்தம் நிறைந்ததொரு முதியோர் தினத்தை கொண்டாடியுள்ளனர்.

மேற்படி பாடசாலை சமூகத்தினர், இன்றைய தினம் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட நோட்டன் பிரீட்ஜ் ‘சந்திரா விஜயரட்ண’ முதியோர் இல்லத்திற்குச் சென்று, அங்குள்ள முதியோர்களுக்கு உணவு உட்பட அத்தியவசிய பொருட்களை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, முதியோர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.

இவ்வாறான கொண்டாட்டங்கள்தான் அர்த்தம் நிறைந்தவையாகும். அநேகமான சர்வதேச தின நிகழ்வுகள், இப்போதெல்லாம் கண்துடைப்பாகவே நடத்தி முடிக்கப்படுகின்றன. ‘நாங்களும் இந்த தினத்தை அனுஷ்டித்தோம்’ என்று காட்டுவதற்காக நடத்தப்படும் நிகழ்வுகள் மூலம், அடுத்தவரை ஏமாற்றுவதோடு, நம்மையும் நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் அர்த்தங்கள் இருக்க வேண்டும். அந்தவகையில், இன்றைய முதியோர் தினத்தினை அர்த்தபுஷ்டியோடு தாமும் கொண்டாடி, மற்றவர்களையும் சந்தோசப்படுத்திய மஸ்கெலியா சென். ஜோசப் தமிழ் மகா வித்தியாலயத்தினருக்கு நமது பாராட்டுக்கள்.

ஒரு முதியோர் தினத்தை எவ்வாறு அர்த்தம் நிறைந்ததாகக் கொண்டாடலாம் என்பதை, மஸ்கெலியா சென். ஜோசப் தமிழ் மகா வித்தியாலயத்தினர் தமது செயற்பாட்டினால் நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்!!Elderly day - 04

Elderly day - 02Elderly day - 01(புகைப்படங்கள்: க. கிஷாந்தன்)

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்