கொள்ளையிட்ட மாணிக்கக் கல்லைப் பாதுகாக்க, 38 லட்சம் ரூபாவில் மாந்திரீகம்: மதுஷின் சகா வெளியிட்ட தகவல்
– எழுதுபவர் ஆர். சிவராஜா –
பன்னிப்பிட்டியவில் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 700 கோடி ரூபா பெறுமதியான ரத்தினக்கற்கள் டுபாய் சென்றதாக முன்னர் வெளிவந்த செய்திகளில் சில திருத்தங்கள் உள்ளன.
அப்படி கொள்ளையிடப்பட்ட ரத்தினக்கற்களில் 200 கோடி ரூபா பெறுமதியான சில கற்கள் மட்டும் டுபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளன. நேற்று கைப்பற்றப்பட்ட கல்லின் பெறுமதி 500 கோடி ரூபா. அதுவும் டுபாய்க்கு அனுப்பப்பட்டதாக முன்னர் வந்த தகவல்கள் பொலிஸாரின் கவனத்தை திசைதிருப்ப கைதான நபர்கள் வழங்கியவையாகும்.
200 கோடி ரூபா பெறுமதியான ரத்தினக்கற்களை டுபாய் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக சென்ற பெண்கள் சிலர் எடுத்துச் சென்றுள்ளதாகவும், பாடகர் அமல் மற்றும் நடிகர் ரயன் ஆகியோருக்கு தெரிந்தே இவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இப்போது உறுதியாக தெரியவந்துள்ளது.
யார் இந்த கெலுமா
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்திக்க கெலும் என்ற கெலுமா என்பவர்தான் மதுஷின் இலங்கை வியாபாரத்தை நடத்திய முக்கிய புள்ளி. அவரிடம் இருந்தே சரியான தகவல்களை பெறுகின்றனர் பொலிஸார்.
கெலுமா மதுஷின் வலது கை. பல வியாபாரங்களை நேர்த்தியாக முடித்துக் கொடுத்தவர். பிட்டிகலவில் அவர் ஒரு சமூக சேவையாளர். மதத்தலங்களுக்கு உதவுவது முதல் மரணவீடுகளுக்கு செல்வது வரை அவர் மக்களுடன் நெருங்கிப் பழகி வந்தார்.
மதுஷின் நெட்வெர்க் சிக்கிவிடக் கூடாதென்பதால்தான் அவர் 102 தொலைபேசிகளை பாவித்து வந்தார். ஒரு ஃபோன் காணாமல் போனால் அல்லது பொலிஸிடம் சிக்கினால் ஒருவரே சிக்குவார். எனவேதான் இந்த யுக்தி.
700 கோடி பெறுமதியான ரத்தினக்கற்களை கொள்ளையிட்டு அந்தப் படத்தை மதுஷுக்கு அனுப்பி, 200 கோடி ரூபா பெறுமதியான கற்களை மதுஷ் அனுப்பிய ஒரு நபரிடம் கையளித்துவிட்டு, மிகுதி 500 கோடி ரூபா பெறுமதியான கல்லுடன் மொறட்டுவைக்கு செல்கிறார் கெலுமா.
38 லட்சத்தில் மாந்திரீகம்
பின்னர் அதனை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த அவர், இந்த ரத்தினக்கல்லை பாதுகாத்து தன்னையும் பாதுகாக்க தனக்கு நெருக்கமான மாந்திரீகர் ஒருவரை நாடியுள்ளார். அந்த மாந்திரீகர் கெலுமாவுக்கு விசேட தாயத்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார் . அதற்கு மட்டும் 38 லட்சம் ரூபாவை வழங்கியுள்ளார் கெலுமா.
கென்ய வனப்பகுதி ஒன்றில் இருக்கும் அரிய இலைகளின் திரவம் ஒன்றினை கொண்டு அந்த தாயத்து தயாரிக்கப்பட்டதாக கூறி, 50 லீற்றர் பாலால் அதனை கழுவி அபிஷேகம் செய்திருக்கிறார்
அந்த மாந்திரீகர். பொலிஸ் விசாரணைகளில் கெலுமா சொன்ன தகவல்கள் இவை.
இப்போது கெலுமாவிடம் நீண்ட விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸ், பல புதிய தகவல்களை அறிந்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல்: முக்கிய தலைகள்
டுபாயில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்புவோரில் மாக்கந்துர மதுஷ் – அன்னாசி மெரில் ஆகியோரே முக்கியமானோர்.
ஆனால் இவர்களுக்கு அப்பால் மேலும் ஒரு முக்கியஸ்தர் டுபாயில் இருந்து போதைப்பொருட்களை இலங்கைக்கு அனுப்புவது தெரியவந்துள்ளது.
அவர் தொடர்பான விசாரணைகள் நடப்பதால் மேலதிக விபரங்களை பொலிஸ் வெளியிடவில்லை.
இதற்கிடையில் மாக்கந்துர மதுஷை பயன்படுத்தி முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய முயன்றதாக சொல்லப்படும் சதி குறித்தும் பல முக்கிய விடயங்கள் வெளிவந்திருக்கின்றன.
இதைவிட முக்கியமான விடயம் மாக்கந்துர மதுஷின் பெயரைப் பயன்படுத்தி, அவர் சிறையில் இருந்து பேசுவதைப் போல பாசாங்கு செய்து, வர்த்தகர்களிடம் கப்பம் பெற ஒரு கோஷ்டி முயற்சிப்பதாக பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இதுவரை கைப்பற்றப்பபட்ட போதைப்பொருட்களை ஏப்ரல் முதலாம் திகதி கட்டுநாயக்கவில் நீதிபதிகள் முன்னிலையில் அழிக்க பொலிஸ் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மதுஷ் பற்றிய முன்னைய பதிவு: பர்தா அணிந்து வந்த ஆண்கள்; மதுஷை போட்டுத்தள்ளும் திட்டம்: தப்பித்தது எப்படி?