கடலலை சறுக்கலில் அசத்தும் பெண்கள்
🕔 March 6, 2019
கடலலைகளில் சறுக்கி சாகசம் புரிந்த அந்தப் பெண்ணின் பெயர் – ரவீந்திர ராஜா பேபி ராணி. ‘அறுகம்பே விமன் சர்ஃப் கிளப்’ உறுப்பினர் என்று, தன்னை அவர் அறிமுகம் செய்து கொண்டார். கடலலை சறுக்கலில் ஈடுபடும் பெண்களுக்கென இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் ‘கிளப்’, இலங்கை சர்ஃபிங் சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கே உள்ள அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ளது அறுகம்பே. சுற்றுலாப் பயணத்துக்கும், சர்ஃபிங் விளையாட்டுக்கும் உலகளவில் அறுகம்பே புகழ்பெற்ற இடமாகும்.
‘சர்ஃபிங்’ எனப்படும் கடலலைச் சறுக்கல் விளையாட்டில், பெண் பயிற்றுவிப்பாளர்களின் திறன்களை மேற்படுத்துவதோடு, இதில் ஈடுபடும் பெண்களுக்கான அமைப்பினை வலுப்படுத்தும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வொன்று, அறுகம்பேவில் நடைபெற்றது.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், ஆஸ்திரேலியாவின் இலங்கைக்கான துணை தூதர் விக்டோரியா கோக்லே முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இதன்போது ‘அறுகம்பே விமன் சர்ஃப் கிளப்’ என்கிற அமைப்பும், அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
தங்கள் அமைப்பில் 20க்கும் மேற்பட்டோர் அங்கத்தவர்களாக உள்ளனர் என்கிறார் பேபி ராணி. அவர்களில் 09 பேர் தமிழர்கள், ஏனையோர் சிங்களவர்கள்.
பேபி ராணி – தமிழ்பெண். 31 வயதாகிறது; திருமணமாகி 03 பிள்ளைகள் உள்ளனர். சர்ஃபிங் விளையாட்டில் அசத்துகிறார்.
“எனது தந்தையும் சர்ஃபிங் விளையாட்டு வீரர். அவர் இப்போது உயிருடன் இல்லை,” என்றார் பேபி ரணி. அவரின் கணவர் மற்றும் சகோதரர்களும் சர்ஃபிங் விளையாட்டு வீரர்கள் என்பதோடு, சர்ஃபிங் பயிற்றுவிப்பாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
அதனால், சர்ஃபிங் விளையாட்டு, பேபி ராணிக்கு புதியதல்ல.
“அறுகம்பே சேர்ஃபிங் பாய்ண்ட் அமைந்துள்ள இடத்துக்கு அருகாமையில்தான் எங்கள் வசிப்பிடம் இருந்தது. அதனால் சிறிய வயதில் கடலில்தான் அடிக்கடி குளித்து விளையாடுவேன். ஆனால், அப்போது சர்ஃபிங் விளையாட வேண்டும் என்கிற ஆர்வம் இல்லை. பின்னர், நாங்கள் வேறு இடத்தில் குடியேறி விட்டோம்” என்றார் அவர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் சர்ஃபிங் விளையாட்டில் பேபி ராணி ஆர்வத்துடன் ஈடுபடத் தொடங்கியுள்ளார். இவ்வாறு சர்ஃபிங் விளையாட்டில் ஆர்வமுள்ள பெண்களுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ், பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அறுகம்பேயில் ஒவ்வொரு வருடமும் சர்வதேச சர்ஃபிங் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதும், அவற்றில் வெற்றி பெறுகின்றவர்களுக்கு, பெருமளவுவு பணத் தொகைகள் பரிசாக வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கடற்கரைகளிலேயே கால் நனைப்பதற்குப் பயப்பட்டுக் கொண்டிருந்த நமது பெண்கள், இப்போது கடலலைகளில் சறுக்கி சாகசம் புரிகின்றமை மகிழ்சிக்குரியதாகும்.
சாதிக்கவும், சம்பாதிக்கவும், சாகசம் புரியவும் ஆசைப்படுகின்ற பெண்களுக்கு – கடலும் கூட திறந்து கிடக்கிறது.
பிபிசி