500 கோடி ரூபா வைரத்துடன் கைதானவருக்கு விளக்க மறியல்
கொள்ளையிடப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான நீல வைரத்துடன் கைதான கெவுமா என அறியப்படும் கெலும் இந்திக்கவை 07 நாட்கள் தடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை மஹர நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியது.
இதேவேளை, கெவுமா என அறியப்படும் கெலும் இந்திக்க, தற்காலிகமாக தங்கியிருந்த இரண்டு வீடுகளில் இருந்து தோட்டாக்கள் உள்ளிட்ட சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த வீடுகளில் இருந்து 647 தோட்டாக்கள், 126 கையடக்க தொலைபேசிகள், 03 கைவிலங்குகள், 40 பவுண் தங்கம், பொலிஸ் மற்றும் ராணுவ சீருடைகள் மீட்கப்பட்டுள்ளன.
தற்போது டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினர் மாகந்துரே மதூஷின் திட்டத்துக்கு அமைய இரண்டு குழுக்களை குறித்த வைர கொள்கைக்காக கெவுமா ஈடுபடுத்தியதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
அத்துடன் குறித்த வைரத்தின் உரிமையாளர் அது தன்னுடையது என உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவருக்கு அந்த வைரம் கிடைத்த விதம் தொடர்பில் பிறிதொரு விசாரணை இடம்பெறுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.