சேரிப்புற மக்களுக்கு வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்; உலக வங்கி அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

🕔 September 29, 2015

Hakeem - 01321
கரப் புறங்களில், சேரிகளில் – வசதி குறைந்த ஆரோக்கியமற்ற குடியிருப்புக்களில் வாழும் வறிய மக்களுக்கு, வசதிகளுடன் கூடிய வீடமைப்புத் திட்டங்களை அதிகமாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

அதற்காக எந்தச் சவாலுக்கும் முகம் கொடுப்பதற்குத் தயாராக வேண்டுமென்றுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நடைபெற்ற உலக வங்கியின் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உலக வங்கியின் ‘தென்கிழக்காசியாவில் நகர மயமாக்கல்’ பற்றிய அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் ‘நிலையான நகர அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்’ என்ற தொனிப்பொருளில், உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம், அங்கு மேலும் தெரிவிக்கையில்ளூ

”இலங்கையின் எதிர்காலம் நகர மயமாக்கலை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வதிலேயே தங்கியிருக்கின்றது. எனக்கு தற்பொழுது வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்பின் முக்கியமான ஒரு பகுதி நகரங்களை உரிய முறையில் திட்டமிடுவதாகும்.

கொழும்பு நகரில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசதி குறைந்த, ஆரோக்கியமற்ற சேரிப்புறங்களில் வசிக்கின்றனர். இந்தக் குடியிருப்புகள் மொத்தத்தில் ஆயிரக்காணக்கான ஏக்கர்களில் விசாலமானவையாகும்.

அதேவேளை, உயரமான தொடர்மாடி வீடுகள் நகரத்தில் விலை மதிப்புக் கூடிய பகுதிகளில் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இதனால், மத்திய தர வர்க்கத்தினரின் வீட்டுப் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. அவர்கள், மேல் மாகாணத்தின் புறநகரப் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வாழவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மாநகரப் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு ஏற்பாடுகளான நீர் விநியோகம், வடிகால், திண்மக் கழிவகற்றல், சுகாதாரம் மற்றும் மின்சாரம் போன்றவை மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. வாகன உரிமையாளர்களின் அதிகரிப்பானது, பாதைகளின் நெரிசலை கூட்டியிருக்கின்றது.

உலக வங்கியின் அறிக்கையை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது இலங்கையிலும் நகரப்புற மக்கள் மத்தியில் காணப்படும் வறுமை வெகுவாக அகன்றிருக்கின்றது. இது 2002ஆம் ஆண்டில் 7.9 வீதமாக இருந்து, பின்னர் 2013ஆம் ஆண்டு 02 வீதமாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நகரங்களிலுள்ள சேரிப் பகுதிகளில், வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைந்துள்ளது. இலங்கையின் நகரங்கள் – வாழ்வாதார வசதிகள் மிக்கனவாகவும், சுபீட்சகரமானதாகவும் மாற்றம் பெற்று வருகின்றன.

சேரிகளில் வாழும் நகரப்புற வறிய மக்களுக்கு, வீடமைப்புத் திட்டங்கள் அதிகமாக ஏற்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள்தான் நகரத்தில் வசிதியோடு வாழும் மக்களுக்கு ஊழியம் புரிகின்றனர். அத்துடன் அவர்கள் துறைமுகத்திலும், தொழில் பேட்டைகளிலும் தொழிலாளர்களாக உழைக்கின்றனர்.

தொழில் பாதுகாப்பற்ற ஆபத்துகளுக்கு உள்ளாகும் நிலைமையில் வசிக்கும் மற்றும் தொழில் புரியும் சேரிப்புற மக்கள் மீது, எங்களது கவனம் வெகுவாக ஈர்க்கப்படுவதும் அவசியமாகும். இதனை உலக வங்கியின் அறிக்கையும் சுட்டிக்காட்டுகின்றது.

வேகமாக அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்புடையதாக, சமூகப் பொருளாதார பௌதீக உட்கட்டமைப்பு வசதிகளுக்கேற்ப நகரமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நகர மயமாக்கல், பூகோளமயமாக்கல், வர்த்தகம், தகவல் தொழிநுட்பம் மற்றும் தொழிற்சாலைகள் என்பன, நகரப் பகுதியை நோக்கி மக்களை ஈர்க்கச் செய்கின்றது. நகரத்தை அண்டிய பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபடும் குடிமக்களின் எண்ணிக்கை குறைந்து, தொழிற்சாலைகளில் வேலை தேடுவோரின் தொகை கூடிச் செல்கின்றது. நவீன விவசாய யுத்திகளை கையாள்வது இதற்கு மாற்று வழியாகும்” என்றார்.

இந்நிகழ்வில் பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, உலக வங்கியின் சிரேஷ்ட பணிப்பாளர் எடி ஜோர்ஜ் இஜாஸ் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் பிரங்கொயிஸ் கொலடஸ் ஆகியோரும் உரையாற்றினர்.Hakeem - 01323Hakeem - 01322

Comments

புதிது பேஸ்புக் பக்கம்