ஜனாதிபதி கொலைச் சதி; மதுஷ் சொல்லப் போகும், உண்மை என்ன?
– எழுதுபவர் ஆர். சிவராஜா –
மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களின் விசாரணைகள் – மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் இறுதிப்படுத்தலில் ஏற்பட்ட தாமதமே அவர்கள் மீதான விசாரணைக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்க காரணமாகும்.
டுபாயில் மதுஷின் செயற்பாடுகளை கண்காணித்து பல விடயங்களை திரட்டியுள்ள அந்நாட்டு பொலிஸ், அவற்றின் உண்மைத்தன்மைகள் பற்றியும் ஆராய்ந்து வருகிறது. கடந்த காலங்களில் மதுஷின் முதலீட்டால் டுபாய் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தகங்கள் குறித்தும் பல முக்கிய தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
இதற்கிடையே இலங்கையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரத்தினக்கல், டுபாய் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் பல முக்கிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மதுஷுடன் சிக்கிய புள்ளிகள் சிலர், அந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வெளிவராத தகவல்களை வழங்கியுள்ளனர். அதேபோல் போதைப்பொருள் விற்பனை தொடர்பிலும் மதுஷுடன் இருந்த பாகிஸ்தான் தொடர்புகளை கண்டறிந்துள்ளது டுபாய் பொலிஸ்.
தலைதூக்கத் தொடங்கும் அன்னாசி மெரில்
மதுஷ் கோஷ்டி சிக்கிய கையோடு, அவர்களின் எதிரி அணியாக செயற்பட்ட அன்னாசி மெரில் (அந்தனி மைக்கல் மெரில்) தலைமையிலான அணி இப்போது தலைதூக்க ஆரம்பித்துள்ளது. முன்னரும் இந்த அணி செயற்பட்டபோதும் மதுஷுக்கும் இவர்களுக்கும் இடையில் இருந்த பகைமை காரணமாக அடக்கியே வாசித்தது மெரில் ரீம்.
ஆனால் அண்மையில் 294 கிலோ ஹெரோயினை கொண்டுவந்து சிக்கிக் கொண்டது இந்த ரீம். பங்களாதேஷ் பிரஜை ஒருவர் உட்பட ஐந்து பேர் இந்த போதைப்பொருளை அனுப்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாக்கந்துர மதுஷுக்கு பயந்து இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற மெரில், மத்திய கிழக்கு நாடுகளிலும் லண்டனிலும் மாறி மாறி வாழ்ந்து வருவதாக பொலிஸ் சொல்கிறது. ஏற்கனவே ஒரு கொடுக்கல் வாங்கலால் மதுஷ் ரீம் பாகிஸ்தான் தாவூத் இப்ராகீம் அணியுடன் பகையை சம்பாதித்துக் கொண்டிருந்ததல்லவா, அந்த பாகிஸ்தான் ரீமுடன் கைகோர்த்து ஒருபக்கம் மதுஷை மடக்கும் வேலைகளை மறைமுகமாக செய்துவந்த மெரில் ரீம், மறுபுறம் போதைப்பொருள் வியாபாரத்தையும் செய்து வந்தது.
மெரில் அணியை மதுஷ் பல தடவை எச்சரித்திருந்தார். முன்னர் ஒரு தடவை தெற்கின் கரையோரத்துக்கு விசேட படகில் போதைப்பொருள் ஒரு தொகுதியை அனுப்பி வைத்திருந்தார் மெரில். அந்த போதைப்பொருள் கரைக்கு வந்த கையோடு நார்க்கொட்டிக் சீருடையில் வந்த குழுவொன்று, அதனை கைப்பற்றி எடுத்துச் சென்றது. அந்த போதைப்பொருள் தொகுதியை கையேற்க வந்த மெரிலின் சகாக்கள் இந்த தகவலை டுபாயில் இருந்த மெரிலுக்கு தெரியப்படுத்தினர். அந்த அதிர்ச்சியில் இருந்து மெரில் மீள முன்னர், அவருக்கு கிடைத்த இன்னொரு தகவல் அவரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (நார்க்கொட்டிக்) அதிகாரிகளின் சீருடை அணிந்து அந்த போதைப்பொருளை எடுத்துச் சென்றதே மதுஷ் ரீம்தான் என்பதே அந்த தகவல். ”மெரில்… இது ஆரம்பம் மட்டும்தான். இதனை இத்துடன் நிறுத்திக் கொள். இல்லாவிடில் நான் கெட்டவன் என்று சொல்லாதே. என் வழியில் குறுக்கிடாமல் வேறு வழியை பார்” என்று அப்போது மெரிலுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பினார் மதுஷ். அதன் பின்னரே இருவரும் கீரியும் பாம்புமாக மாறினர்.
இப்போது சில தினங்களுக்கு முன்னர் மெரில் ரீம் அனுப்பிய 294 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கூட, ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக தென் மாகாண கடற்கரைக்கு படகு மூலம் வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மதுஷ் ரீம் போலவே இப்போது மெரில் ரீமும் – எஸ்.ரி.எஃப். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்பிடம் சிக்கித் தவிக்கிறது. இன்னும் பலர் சிக்குவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
தாவூத்தை அறிமுகப்படுத்திய கஞ்சிப்பான
மதுஷுக்கு தாவூத் இப்ராகீம் ரீமை அறிமுகப்படுத்தியது கஞ்சிப்பான இம்ரான் என சொல்கின்றன பாதுகாப்பு வட்டாரங்கள்.
இப்படியான நிலையில் இப்போதுதான் மதுஷ் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதுஷ் மற்றும் சகாக்கள் கைது செய்யப்பட்டது முதல், இதுவரை இலங்கையில் இருந்து எந்த விசாரணைக்குழுவும் டுபாய்க்கு செல்லவில்லையல்லவா?
டுபாய் செல்கிறது, இலங்கை அணி
ஆனால் இப்போது விசாரணைக்கு அதிகாரிகள் கொண்ட ரீம் ஒன்று டுபாய் செல்லவுள்ளது என்பதை உறுதியான வகையில் கூற விரும்புகிறேன்.
ஆனால் அது போதைப்பொருள் அல்லது ரத்தினக்கல் கொள்ளை தொடர்பான விசாரணைகளுக்காக அல்ல. ஜனாதிபதி மைத்ரி கொலைச் சதி விவகாரம் குறித்து வாக்குமூலம் ஒன்றை மதுஷிடம் பெறவே விசேட பொலிஸ் குழு செல்லவுள்ளது.
இதற்கான அனுமதியை கேட்டு அரச உயர்மட்ட தலைவர் ஒருவர் டுபாய் ஆட்சியாளர்களிடம் விடுத்த கோரிக்கை ஒன்றையடுத்தே இந்த குழு செல்லவுள்ளது. இதற்கான அனுமதிக்கடிதத்தை இலங்கை பாதுகாப்பமைச்சுக்கு வழங்க, டுபாய் அரசு தீர்மானித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதன்படி அடுத்த வாரமளவில், சட்ட மா அதிபர் திணைக்களம், சி.ஐ.டி, நீதியமைச்சு, வெளிநாட்டமைச்சு மற்றும் விசேட அதிரடிப்படை ஆகியவற்றின் முக்கிய பிரமுகர்கள் கொண்ட ஒரு குழுவே இவ்வாறு டுபாய் செல்லவுள்ளது.
ஜனாதிபதி கொலைச் சதி விசாரணை
இந்த சதி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள டி.ஐ.ஜி. நாலக்க சில்வா மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் ஆராயப்பட்டனவல்லவா? அதில் ஒரு இடத்தில் அவர்; “இந்த டீலை மதுஷிடம் ஒப்படைப்போம்” என்று கூறியிருப்பதால், அதுபற்றி இந்தக் குழு மதுஷிடம் நீண்ட விசாரணைகளை நடத்தவுள்ளது.
மதுஷிடம் இதுபற்றி துப்பு கிடைத்தால், அவரை டுபாய் நீதிமன்ற விசாரணைகளுக்கு பின்னர் நாடுகடத்த இலங்கை கோரலாம்.
மறுபுறம் போதைப்பொருள் விற்பனை சம்பந்தமாக எதுவும் தகவல்கள் சிக்கிவிட்டால் டுபாயில் மரணதண்டனை வழங்கப்படலாம் என்று அஞ்சி, இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதே நல்லதென கருதி மதுஷ் – கொலைச்சதி விவகாரத்தின் உண்மைகளை கக்கலாம் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் கருதுகின்றன.
நாட்டின் தலைவர் ஒருவரை கொல்லச் சதி செய்த ஒருவரை விசாரிக்க அனுமதி வழங்கிய டுபாய், அவரை அந்த நாட்டிடம் மேலதிக விசாரணைகளுக்கு கையளிக்குமென, டுபாய் பாதுகாப்பத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் இலங்கை பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் கூறியுள்ளார்.
இந்த விசாரணைகளில் ஜனாதிபதி மைத்திரியின் நேரடி கண்காணிப்பு இருப்பதால் விசாரணைகள் மேலும் தீவிரமடையலாம்.
இதற்கிடையில் நேற்று தெமட்டகொடையில் கைது செய்யப்பட்ட தெமட்டகொட சமிந்தவின் சகோதரர் உட்பட்ட ரீம், குறிப்பாக அவர்களுடன் இருந்த பாகிஸ்தான் தம்பதியினர் குறித்து தீவிர விசாரணைகள் நடக்கின்றன.
இந்த சுற்றிவளைப்பின் போது தெமட்டகொட சமிந்தவின் சகோதரரது புதல்வர் கைதுப்பாக்கியுடன் தப்பிச் செல்ல முற்பட்டபோதும் அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் மதுஷ் ரீமுக்கு எதிரானவர்கள் என்று கருதப்படுகிறது.
மதுஷ் தொடர்பான முன்னைய பதிவு: தீவு ஒன்றையே விலைக்கு வாங்கத் துணிந்த ‘போதை’ ராஜா