தேசிய காங்கிரஸிலிருந்து விலகுகிறார் சட்டத்தரணி பஹீஜ்; ‘புதிது’ வெளியிட்ட, எதிர்வு கூறல் பலித்தது
– முன்ஸிப் அஹமட் –
முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து, அந்தக் கட்சியின் கொள்கை மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
‘தேசிய காங்கிரசிலிருந்து விலகிக்கொள்வதற்கு, மன வேதனையுடன் தீர்மானித்திருக்கிறேன்’ என, அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளதோடு, அதனை ‘புதிது’ செய்தித்தளத்திடமும் உறுதிப்படுத்தினார்.
தேசிய காங்கிரசின் மூன்றாம் நிலைத் தலைவரும் அக்கட்சியின் பிரதித் தலைவருமான – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, அந்தக் கட்சியிலிருந்து ராஜிநாமா செய்தமையினை அடுத்து, பஹீஜ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
தேசிய காங்கிரஸிருந்து சட்டத்தரணி பஹீஜ் விலகுவார் என்பதை, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி ‘புதிது’ வெளியிட்ட செய்தியொன்றில் எதிர்வு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவிக்கான வேட்பாளராக, கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பில் பஹீஜ் நிறுத்தப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இதற்கான மறைமுக உறுதியினை சட்டத்தரணி பஹீஜுக்கு கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா வழங்கியிருந்ததாகவும் கூறப்பட்டு வந்தது.
ஆயினும் அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தினை பஹீஜுக்கு அதாஉல்லா வழங்காமல் சதி செய்தார் என்கிற குற்றச்சாட்டொன்றும் உள்ளது.
இதனைத் தொடர்ந்து கட்சிக்குள்ளிருக்கும் சிலர், பஹீஜுக்கு எதிராகச் செயற்பட்டதாகவும், அதனை தலைவர் அதாஉல்லா கண்டும் காணாமலிருந்தார் எனவும் கூறப்படுகிறது.
இதேவேளை, தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் உதுமாலெப்பை, அந்தக் கட்சியின் தலைவர் அதாஉல்லாவுடன் முரண்படுவதற்கு பஹீஜ்தான் காரணம் என்றும், அதாஉல்லாவுக்கு நெருக்கமான சிலர் – குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையிலேயே, தேசிய காங்கிரஸிருந்துவிலகுவதற்கு பஹீஜ் தீர்மானித்துள்ளார்.
தனது குடும்பத்தார் மற்றும் நெருக்கமானவர்களை இன்று வெள்ளிக்கிழமை அழைத்துப் பேசிய சட்டத்தரணி பஹீஜ், இந்த முடிவை எடுத்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி, தேசிய காங்கிரஸ் பிரதித் தலைவர் உதுமாலெப்பை, அக்கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக உத்தியோகபூர்வமாய் ஊடகங்கள் முன்னிலையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்திகள்:
01) சட்டத்தரணி பஹீஜும், தே.கா.விருந்து விலகுகிறார்; அடுத்தடுத்து அதாஉல்லாவுக்கு இழப்பு
02) கழுத்தறுப்பு அரசியலுக்கு பலினார் பஹீஜ்; வெட்டுக் குத்துகளுக்கு மத்தியில் அக்கரைப்பற்று தேர்தல் களம்
03) தேசிய காங்கிரஸிலிருந்து விலகி விட்டேன்: முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு