ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்; தீர்வு பெற்றுத் தருவேன் என, பிரதியிமைச்சர் மஹ்ரூப்உறுதி
– ஹஸ்பர் ஏ ஹலீம் –
“ஒலுவில் துறைமுகத்துக்கு எதிர் வரும் கிழமை நாட்களில் விஜயமொன்றை செயற் திட்டத்துடன் மேற்கொள்ளவுள்ளேன்” என துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.
ஒலுவில் துறைமுக மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதியமைச்சராக பதவி ஏற்றது முதல் – ஒரு மாத காலமாக பல கலந்துரையாடல்களினை நடத்தி, அதற்கான செயற்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் உள்ள பிரதியமைச்சின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க் கிழமை ஒலுவில் கரையோர மீனவர்களின் முக்கிய பிரதிநிதிகளுடன் இடம் பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதியமைச்சர்;
எவ்விதமான எதிர்ப்புக்கள் வந்தாலும், முக்கியமாக ஒலுவில் மீனவர்களுடன் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்துள்ளேன். ஒலுவில் மீனவ துறைமுக விடயங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காகவே ஒரு மாத காலமாக பிரதமர் சந்திப்பு, துறைமுக கப்பல் துறை அதிகார சபையின் தலைவர், அமைச்சின் செயலாளர், முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்டோர்களை சந்தித்து தகவல்களை பெற்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளேன்.
மீனவக் குடும்பத்தின் நலனுக்காக, பொறுப்பான பிரதியமைச்சர் என்ற வகையில் செயற்பட்டு வருகிறேன். நீண்ட கால திட்டம் ஒன்றை தயாரித்து பணிகளை மீனவத் துறைமுகத்துக்கான நடவடிக்கைகளை செய்வதற்கான கடப்பாடுகளை ஆரம்பித்துள்ளேன். மீட்டும் திடீர் விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளேன். கரையோர மீனவர்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டு சாதகமான முடிவுகள் ஊடாக எனது பயணத்தை எவ்வித சலசலப்பும் இன்றி ஆரம்பிக்கவுள்ளேன்.
மீனவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நன்கு அறிவேன். அது – மீன்பிடி துறைமுகமாக செயற்படுவதே மீனவக் குடும்பங்களின் எதிர்பார்ப்பாகும். இதனை நிறைவேற்றுவதே எனது கடமையாகும். சம்மந்தப்பட்டவர்களை அழைத்து இது தொடர்பில் பல செயற்திட்டங்களுக்கான தகவல்களை திரட்டியுள்ளேன். கால தாமதமின்றி கரையோர மீனவக் குடும்பங்களின் நலன் கருதி குறித்த செயற்திட்டங்கள் விரைவில் நடைபெறும் .
கரையோர கடலரிப்பு பிரச்சினையும் அங்கு உருவெடுத்துள்ளது. மீனவ துறைமுக அபிவிருத்தியுடன் சேர்ந்து, இதற்குறிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கான வழி வகைகளையும் செய்வதற்காக எண்ணியுள்ளேன்” என்றார்.