காக்கி நிறத்தில் இரு ‘மேர்டர்’
– தருபவர் ஆர். சிவராஜா –
தென் மாகாண வர்த்தகர்கள் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பின்னணி என்ன?
ஜனவரி – 22
தென்மாகாண விசேட புலனாய்வு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் வாகனம் ஒன்றை தமது நண்பரிடம் பெறுகின்றனர்.
ஜனவரி – 23
ரஸீன் சிந்தக்க (31 வயது ), அசேல குமார (33 வயது) ஆகிய வர்த்தகர்கள் அந்த வேனில் பொலிஸாரால் கடத்தப்படுகின்றனர்.
ஜனவரி – 25
இப்படியொரு சம்பவம் இடம்பெறவில்லை என்று பொலிஸ் சொல்கிறது. அதேபோல வீட்டாரின் முறைப்பாட்டையும் பதிய மறுக்கிறது.
ஜனவரி – 26
மாத்தறை – கொழும்பு நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் செய்த, கடத்தப்பட்டவர்களின் ஊர் மக்கள், அவர்களை விடுவிக்க கோருகின்றனர்.
பெப்ரவரி – 06
கடத்தப்பட்டவர்களில் ஒருவரான அசெலவின் மனைவிக்கு மொட்டைக் கடிதம் ஒன்று வருகிறது. ‘கடத்தப்பட்ட உங்கள் கணவர் விசாரிக்கும்போது நடந்த தாக்குதலில் இறந்துவிட்டார். அதனை மற்றவர் பார்த்துவிட்டதால் அவரையும் கொன்று எரித்துவிட்டார்கள்’ என்று அந்த கடிதத்தில் சொல்லப்படுகிறது.
பெப்ரவரி – 15
ஊடகங்களுக்கு தகவல் கிடைக்கிறது. ஜனாதிபதியின் உத்தரவையடுத்து நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட வேன் மீட்கப்படுகிறது.
“தனது தாயாருக்கு வருத்தம் – வைத்தியசாலைக்கு செல்லவேண்டும் என்றுதானே பொலிஸ் அதிகாரி வேனை வாங்கினார். 24 ஆம் திகதி காலை 11 மணிக்கே வேன் திருப்பி தரப்பட்டு விட்டதே” – விசாரணையில் கூறினார் வேனின் உரிமையாளரான இன்னொரு வர்த்தகர்.
பெப்ரவரி – 16
இந்த விசேட பொலிஸ் பிரிவு சீனியர் டிஐஜி – ரவி விஜேகுணவர்தனவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கியதால், நீதியான விசாரணை நடக்கும் வகையில் அவரை இடமாற்றம் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
விசாரணைகள் நடக்கின்றன. முக்கிய அதிகாரிகள் பலர் கைதாவர் என சொல்லப்படுகிறது.
அதன் பின்னர் அந்த பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த கைதுசெய்யப்பட்டார்.
***
கடந்த திங்கட்கிழமை மேற்கண்ட விடயங்களை நான் பதிவிட்டிருந்தேன். இனி விடயத்துக்கு வருவோம்.
***
இந்த வர்த்தகர்கள் கடத்தப்படசம்பவம் தொடர்பில், தென் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜய குணவர்தன – எதுவும் அறிந்திருக்கவில்லை என ஆரம்ப கட்ட விசாரணைகள் சொல்கின்றன.
ஆனால் ஒரு பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் கீழ் செயற்பட்டு வந்த ஒரு பிரிவு செய்ததை, தனக்கு தெரியாது என்று அந்த பிரிவுக்குப் பொறுப்பான ஒரு அதிகாரி கூறி தப்பிக்க முடியுமா என்கிற விமர்சனங்களும் உள்ளன.
இந்த கடத்தல் மற்றும் படுகொலையின் பிரதான சூத்திரதாரி என்று அறியப்படும் கைது செய்யப்பட்ட நிஷாந்த என்பவர், ஏற்கனவே விசேட அதிரடிப்படையின் கீழ் செயற்பட்டு வந்தவர். அங்கு நடத்தை – ஒழுக்கம் சரியில்லாததன் காரணமாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்பினால் துரத்தப்பட்டவர்.
பின்னர் காலிக்கு மாற்றப்பட்டு – அங்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரினால் இடமாற்றம் செய்யப்பட்டார். பலருக்கும் பல காரணங்களுக்காக அச்சுறுத்தல் விடுப்பது மற்றும் ஒழுக்கக் குறைவு காரணமாகவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என சொல்லப்படுகிறது. பின்னரே அவர் தென்மாகாண இந்த விசேட பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடத்தல்
வர்த்தகர்கள் இருவரையும் கடத்திய பொலிஸ், ஒரு பாழடைந்த வீட்டுக்கு அவர்களை கொண்டு சென்றது.
அப்படி கொண்டு சென்று அவர்களை கட்டிவைத்து, பல்வேறு விடயங்கள் குறித்து விசாரணைகளை செய்தது. வர்த்தகர் ஒருவரின் ஒருவரின் கொலை சம்பந்தமாகவும் இதர பல கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலும் இவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த கடத்தல் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸாருக்கு, ஏன் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர் என்பது குறித்து – இதுவரை பெரும் குழப்பம் உள்ளதாக தெரிகிறது.
வர்த்தகர்கள் கடத்தப்பட்ட பின்னர், பாழடைந்த வீட்டில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் சித்திரவதைகளில் – மிக மோசமான வதை என்று சொல்லப்படும் வோட்டர் கோர்ஸ் (water course) இவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது.
கைகளை கட்டி தலைகீழாக ஒருவரை தொங்கவிட்டு அவரின் மூக்கில் தொடர்ந்து நீரை ஊற்றுவதுதான் இந்த சித்திரவதை. இதை தாங்க முடியாமல் பலர் உண்மைகளை சொல்வார்கள் என்றே – பொலிஸார் அவ்வாறு செய்வதாக சொல்லப்படுகிறது.
கடத்தப்பட்ட வர்த்தகர் ஒருவரை, இவ்வாறு பொலிஸார் சித்திரவதை செய்தபோது ஒருவர் இறந்ததாகவும் அதைக் கண்டு மற்றவர் அதிர்ச்சியடைந்ததால், அவர் சாட்சியமாகிவிடக் கூடாதென அவரை துப்பாக்கியால் சுட்டு பொலிஸார் கொலை செய்ததாக சொல்லப்படுகிறது .
பின்னர் உடல்களை வலஸ்முல்ல பகுதி காட்டுக்குள் எடுத்துச் சென்று எரித்துள்ளனர். சுமார் 13 பொலிஸார் இந்த கடத்தலின் பின்னணியில் இருந்ததாகவும், அவர்களில் பலர் மதுபோதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
பின்னணி
இந்த வர்த்தகர்கள் மீது, சம்பந்தப்பட்ட பொலிஸ் விசேட பிரிவின் பொறுப்பதிகாரி மனக்கசப்புடன் இருந்ததாக அறியப்பட்டுள்ளது.
டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷின் ஆயுதங்களை, இவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று கூறி, மேற்படி வர்த்தகர்களை உள்ளே போடுவதுதான் இவர்களின் திட்டமாக இருந்திருக்கிறது. அதனால்தான் கடத்தலுக்காக அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் தொடர்பான சிசிரிவி பதிவுகளை அழித்திருக்கின்றனர்.
ஆனால் இந்த கடத்தலில் ஈடுபட்ட ஒரு பொலிஸ் உத்தியோகத்தர்தான், மனம் கேளாமல் இந்த கொடுமையை வெளிக்கொணர – தனது நண்பர் ஒருவர் மூலம், கடத்தப்பட்ட வர்த்தகர்களின் வீட்டுக்கு அனாமதேய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கடிதமே கடத்தல் மற்றும் கொலைகளை அம்பலப்படுத்தியது.
இதனைவிட, இந்த கடத்தல் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்ற குடும்பத்தினரையும் பொலிஸ் மிரட்டியிருக்கிறது. அவர்கள் தொடர்பில் சிஐடி விசாரிக்கப்போகிறது என்று கூறியதால், குடும்பத்தினர் அச்சப்பட்டுள்ளனர். பின்னர் கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று, இன்னொரு தடவை பொலிஸ் சொல்லியிருக்கிறது. அப்போதே, ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளதை யூகித்துள்ளனர் குடும்பத்தினர்.
கடைசியில் இருவரையும் எரித்து அடையாளங்களையும் அழித்து, சிக்கிக் கொண்டது பொலிஸ்.
இனி…
ஜனாதிபதி மைத்ரி பாதுகாப்பமைச்சர் என்ற ரீதியில், இதில் நேரடியாக தலையிட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பொறுப்பதிகாரி குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த பிரிவில் இருந்த சார்ஜன்ட் (இவரும் கைது) ஒருவரே எரிக்கப்பட்ட இடங்களை காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் நேரடியாக சென்று ஆறுதல் கூற தயாராகி வரும் மைத்ரி, முழு விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நவீன தொழிநுட்ப வசதிகளை கொண்டு விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
வடக்கு – கிழக்கில் பாதுகாப்புத்துறையினரால் கடத்தல்கள் இடம்பெற்று ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட காலம் போய், இப்போது தெற்கிலும் அப்படி ஒன்றுக்கான தேவை வந்துள்ளது.
வேலியே பயிரை மேயலாமா?