கொகெய்ன் பாவிப்பவர்கள் எவரும், நாடாளுமன்றத்தில் இல்லை: அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல
கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கும் எவரும் தற்போதைய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
வத்தேகம பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம்சாட்டியிருந்தார்.
இதனையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் இவ்விடயத்தை விசாரிப்பதற்காக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் குழுவொன்றினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்திருந்தார்.
இதற்கிணங்க, நேற்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை லக்ஷ்மன் கிரியெல்ல தமையிலான குழு விசாரணை செய்தமை குறிப்பிடத்தக்கது.
அரசியல்வாதிகள் பல்வேறு தரப்பினருடனும் தொடர்புகளை வைத்திருக்கிறார்கள். அதற்காக, சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளைக் குற்றம் சொல்ல முடியாது என்றும், இன்றைய நிகழ்வில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.