ரத்கமவில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள், தீ வைத்து எரிக்கப்பட்டுள்னர்: பொலிஸ் பேச்சாளர்
காலி – ரத்கமவில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் இருவரும் கோனமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு, மெதகொடை பிரதேசத்தில் தீ வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் சம்பவத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தெற்கு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் விராஜ் மதுசங்கவை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள், இன்று வெள்ளிக்கிழமை காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்றைய தினம் குறித்த அதிகாரியை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்னவே, பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த டி சில்வா கைது செய்யப்பட்டிருப்பதுடன், அவரை எதிர்வரும் 27ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரம் தெற்கு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக இருந்த பொலிஸ் சிரேஷ்ட பிரதி மா அதிபர் ரவீி விஜேகுணவர்தன பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரத்ன உதாகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ரசின் சிந்தக்க மற்றும் 33 வயதான மஞ்சுள அசேல ஆகிய இரண்டு வர்த்தகர்களும் கடந்த மாதம் 23ம் திகதி கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.