கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய கைதி: இந்தியச் சிறையில் கொடூரம்
இந்தியாவின் ஜெய்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறைக்கைதி ஷாக்கருல்லா என்பவரை, சக சிறைக் கைதிகள் கொன்றுள்ளனர்.
பாகிஸ்தானின் சியால்கோட்டை சேர்ந்த ஷாக்கருல்லா, ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்திய சிறைக் கைதிகள் நான்கு பேர் அவரை கல்லால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக பொலிஸ் கூறுகிறது. ஜெய்பூர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி லக்ஸ்மன் கௌடு, சிறைக்கு வெளியில் கூடிய பத்திரிகையாளர்களிடம் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.
தொடக்கத்தில் தொலைக்காட்சியின் ஒலி தொடர்பாக சர்ச்சை எழுந்து, பின்னர் இது கொலையில் முடிந்துள்ளது என்று கௌடு தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் வெளியானவுடன், பொலிஸ் விரைவாக செயல்பட்டது. டி.ஜி.பி – என்.ஆர்.கே. ரெட்டி உள்பட மூத்த அதிகாரிகள் சட்டவியல் ஆய்வு குழுவினருடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த சம்பவம் பற்றிய சரியான விவரங்கள் வெளிவரும் வகையில், விசாரணை நடைபெற்று வருவதாக கௌடு கூறியுள்ளார்.
தொலைக்காட்சி ஒலியால்தான் சச்சரவு ஏற்பட்டது என்பதுதான் இதுவரை தெரியவந்துள்ளது என்று பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் தீவிரவாதத்தை பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஷாக்கருல்லா மற்றும் மேலும் இரண்டு பாகிஸ்தானிய கைதிகளுக்கு 2017ம் ஆண்டு ஜெய்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
அது முதல் ஷாக்கருல்லா ஜெய்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். லக்ஷர்-இ-தய்பாவோடு பணியாற்றியதாக அவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இந்த வழக்கில் பொலிஸ் எட்டு பேரை குற்றஞ்சாட்டியது. அதில் ஐந்து பேர் இந்தியர்கள். மூன்று பேர் பாகிஸ்தானியர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர், ஜெய்பூர் மத்திய சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் பல்வேறு சிறைகளில் மொத்தம் 20 ஆயிரம் கைதிகள் உள்ளனர். இவர்களில் 62 பேர் வெளிநாட்டவர்கள். அதில் ஒரு டஜனுக்கு மேலானோர் பாகிஸ்தானியர் என்பது குறிப்பிடத்தக்கது.