தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக, ஹாபிஸ் நசீர் நியமனம்

🕔 February 20, 2019

– முன்ஸிப் அஹமட் –

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  புதன்கிழமை இந்த நியமனத்தை வழங்கி வைத்தார்.

பிரதமரின் வசமுள்ள அமைச்சின் கீழ், மேற்படி தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்; முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவராவார்.

ஆயினும், கட்சிக்குள் இவர் அண்மைக் காலமாக ஒதுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஏறாவூரைச் சேர்ந்த ஹாபிஸ் நசீரை விடவும், அதே ஊரைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரசின் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானாவை, மு.கா. தலைவர் ஹக்கீம் முன்கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.

இதனால், ஹக்கீமுடன் ஹாபிஸ் நசீர் – மனக் கசப்புடன் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான பிரதமர், மேற்படி நியமனத்தை வழங்கியுள்ளார்.

இதேவேளை, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக, ஹாபிஸ் நசீர் இன்றைய தினமே கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் மு.காங்கிரஸ் தலைவரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்