ரத்தினமே, ரத்தினமே: மனைவிக்காக மதுஷ் நடத்திய ‘காதல் கொள்ளை
– எழுதுபவர் ஆர். சிவராஜா –
மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு – அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம், இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன.
கொஸ்கொட சுஜி தலைமையிலான குழு, மதுஷின் ஆதரவாளர்களை போட்டுத் தள்ள துவங்கியுள்ளது. மறுபுறம் எதிரியின் எதிரி என் நண்பன் என்று அமைதியாக காவல்துறை அதனை பார்த்துக் கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.
மதுஷ் வசம் ஆயிரம் கோடி ரூபா பணம் இருந்தது என்றும், அவர் தொடர்பான விசாரணைக்காக விசேட குழு ஒன்று டுபாய் செல்கிறது என்றெல்லாம் வந்த செய்திகள் தவறானவை.
டுபாய் மறுப்பு
மதுஷை விசாரிக்கும் விடயத்தில் ஒத்துழைக்க உதவ முடியுமெனக் கூறி டுபாய் வர அனுமதி கேட்டு இலங்கை பாதுகாப்பமைச்சு முன்னதாக கடிதம் ஒன்றை மின்னஞ்சலில் அனுப்பியிருந்த போதிலும், அது இப்போதைக்கு தேவையில்லை நீதிமன்ற உத்தரவு ஒன்றின் பின்னர் அப்படியானதை பரிசீலிக்கலாம் என்று பதில் வழங்கியிருந்தது டுபாய் பாதுகாப்புத்துறை.
அதேசமயம் இங்கிருந்து அதிகாரிகள் செல்வது தொடர்பாகவும், மதுஷ் தரப்பினரை நாடுகடத்தும் சட்ட விடயங்கள் பற்றியும், கொழும்பில் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் – சி ஐ டி அதிகாரிகளும் ஆராய்ந்த போதும், டுபாய் அரசு அனுமதி கொடுக்காத காரணத்தினால் அந்த பேச்சுக்கள் இடைநடுவில் நிற்கின்றன.
இந்த நிலைமையில் அங்கு சென்று வீணாக நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதில் அர்த்தம் இல்லை என்பதால், டுபாய் நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் அவற்றை பார்க்கலாமென ஜனாதிபதியும் பணிப்புரை விடுத்துள்ளார்.
அநேகமாக வரும் 28 ஆம் திகதி மதுஷ் மற்றும் சகாக்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படலாம்.
சர்வதேச சட்டத்தரணிகள்
மதுஷ் தரப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக இந்தியா – பாகிஸ்தான் – எகிப்து ஆகிய நாடுகளின் முன்னணி சட்டத்தரணிகள் பேசப்பட்டுள்ளதாக
சொல்லப்படுகிறது.
ரத்தினக்கல் கொள்ளையில் விவகாரம்
மறுபுறம் இங்கே இலங்கையில் தேடுதல் வேட்டை தொடர்கிறது. கடந்த வருடம் கொள்ளையடிக்கப்பட்ட ரத்தினக்கல் தொடர்பில் இன்று செவ்வாய்கிழமையும் ஒருவரை கைது செய்தது பொலிஸ் விசேட அதிரடிப்படை.
நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில் ஒருவரை பொலிஸ் கைது செய்ததல்லவா? அவரிடம் இருந்தும் பல முக்கிய தகவல்களை பொலிஸ் கறந்து வருவதாக சொல்லப்படுகிறது.
அதிகாலை வேளை, ஹோட்டலுக்குள் சென்ற அவரை சந்திக்க – பெண் ஒருவரும் வந்து சென்றுள்ளார். காலை எட்டு மணிபோல் அதிரடியாக சுற்றிவளைத்த அதிரடிப்படை அவரை கைது செய்தது.
பிரான்ஸிலிருந்து சென்றவர் யார்?
இந்த நிலையில், டுபாயில் நடந்த விருந்துக்கு பிரான்சில் இருந்து வந்து கலந்து கொண்ட முக்கியஸ்தர் யார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஜனாதிபதி கொலைச்சதி விவகாரத்தை வெளிப்படுத்திய நாமல் குமார – தமக்கு நிதி உதவிகளை செய்த நபர் பிரான்சில் இருப்பதாக கூறியிருந்தார். அந்த நபர்தானா இவர் என்பதை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
டுபாய் பொலிஸார் நடத்திய விசாரணைகளின்போது, சம்பந்தப்பட்ட விருந்து பிறந்த நாளுக்கான ஏற்பாடு என்று மதுஷ் மட்டுமே கூறியுள்ளதாக தகவல். சீனியர் டிஐஜீ லத்தீப் ஓய்வுபெறுவதை முன்னிட்டே இது நடந்ததென்று இதர பலர் தெரிவித்திருப்பதாக தகவல்.
டிஐஜி லத்தீப்பின் பதவிக்காலம் முடிவடைந்து ஓய்வில் செல்லவுள்ளாரென்றும் அவருக்கு பதவி நீடிப்பு கிடைக்காமல் இருக்க ஏற்பாடுகளை செய்து, தங்களுக்கான பெரும்தடையை நீக்கியுள்ளதால் இந்த நிகழ்வு நடத்தப்படுவதாகவும் விருந்துக்கு அழைத்த தனது நண்பர்களிடம் முன்கூட்டியே மதுஷ் மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாக பொலிஸ் தகவல்.
அமெரிக்க பிரஜையுடன் தொடர்பு
இதேவேளை ரத்தினக்கல் கொள்ளை குறித்து பொலிஸார் நடத்திய விசாரணைகளுக்கு வருமாறு விடுத்த அழைப்பை மறுத்து, அவசர வேலையாக வெளிநாடு செல்லவிருப்பதாக தெரிவித்து இப்போது டுபாயில் சிக்கியிருக்கும் நடிகர் ரயனுக்கும், கொழும்பில் கைது செய்யப்பட்ட அமெரிக்கப் பிரஜைக்கும் நீண்ட நாள் நட்பு இருந்தமை குறித்தும், அவர்களின் பல ரகசிய செயற்பாடுகள் பற்றியும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காதல் கொள்ளை
ரத்தினக்கல் கொள்ளையிடப்பட்ட பின்னர், அதன் படம் மதுஸுக்கு அனுப்பப்பட்டது முதல் தொலைபேசியில் IMO செயலி ஊடாக மதுஷுடன் இங்கிருந்து பலர் பேசியது வரை, அனைத்து விபரங்களையும் பொலிஸார் அறிந்துள்ளனர். இன்று கைது செய்யப்பட்டவர் மூன்றாவது சந்தேக நபர். இன்னும் பலர் தேடப்படுவதாக தகவல்.
மதுஷின் இரண்டாவது மனைவிக்கு இந்த ரத்தினக்கல் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மதுஷுக்கு கிட்டத்தட்ட 25 ற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் டுபாயிலும் இலங்கையிலும் இருப்பதாக தெரியவந்தாலும், அவை வெவ்வேறு பெயர்களில் உள்ளன. அவற்றின் முழு விபரங்களை பெறுவதாயின் நீதிமன்றம் செல்லவேண்டும். டுபாயில் அஜித் என்ற பெயரில் மதுஷ் வைத்திருக்கும் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை முடக்க நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும். அது இப்போதைக்கு நடக்காது. ஏனெனில் இலங்கைக்கே மதுஷ் விவகாரம் பெரியது. அவர்களைப் பொறுத்தவரை இது பத்தோடு பதினொன்று.
ஐ.ஆர்.சி.யில் இல்லை
இலங்கையில் மதுஷ் பல குற்றச் செயல்களை புரிந்தாலும் ஐ. ஆர். சி. பட்டியலில் அவரின் பெயர் இதுவரை இடம்பெறவில்லை. ஐ. ஆர். சி. பட்டியலில் 40 ஆயிரம் பேர் உள்ளனர் . சிறுவர்கள் 608 பேரும் பெண்கள் 1200 பேரும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மறுபுறம் இலங்கையில் மதுஸுடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகள் குறித்து பகிரங்க கருத்து வெளியிட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க எம்.பி, அந்த அரசியல்வாதிகள் குறித்து ஒரு பட்டியலை சபாநாயகரிடம் கையளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளார். முன்னதாக அந்த அரசியல்வாதிகள் குறித்து அரச புலனாய்வுத்துறையும் ரகசிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தேர்தல் ஒன்று வரும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த அரசியல்வாதிகள் பெரும் சிக்கலில் மாட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இவை ஒருபுறமிருக்க, ஜனவரி இரண்டாம் வாரம் டுபாயில் ஒரு பார்ட்டி நடத்தினார் மதுஷ் . அதற்கு சென்றோரும் இப்போது தேடப்படுகின்றனர்.
சுவிஸ் கனவு
இதேவேளை, சுவிஸுக்கு சென்று அங்கு சில காலம் வாழவும் சுவிஸ் வங்கியில் தனது பணத்தை வைக்கவும் மதுஷ் திட்டமிட்டு, நிரந்தர விசாவுக்கு விண்ணப்பம் செய்யவும் தயாராகியிருந்ததாகவும் தகவல்.
ரத்தினக்கல் கொள்ளை தொடர்பான சர்வதேச கொள்ளைச் சம்பவம் ஒன்றை பின்பற்றியே, கொழும்பு ரத்தினக்கல் கொள்ளையை மதுஷ் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
2013 ஆம் ஆண்டு பெல்ஜியம் பிரசல்ஸ் விமான நிலையத்தில் இருந்து சுவிஸ் சூரிச் விமான நிலையத்திற்கு செல்லவிருந்த விமானத்திற்குள் அதிரடியாக புகுந்த கொள்ளையர்கள், 05 நிமிடத்திற்குள் 50 மில்லியன் டொலர் பெறுமதியான ரத்தினக்கற்களை கொள்ளையிட்டிருந்தனர். விமான நிலைய பாதுகாப்பு வேலிகளை அறுத்து அதிரடியாக பாதுகாப்பு தரப்பின் சீருடையில் புகுந்த கும்பலே அப்போது கொள்ளையை நடத்தியது.
அதே பாணியில் இங்கு கொள்ளையை நடத்திய மதுஷ், தான் ஏற்பாடு செய்து அழைத்து வந்த வெளிநாட்டுப்பிரஜையை கூட, கொள்ளை நடக்க முன்னர் ரத்தினக்கல் உரிமையாளரது பன்னிப்பிட்டிய இல்லத்தில் வைத்து கைது செய்து, வந்தது பொலிஸ்தான் என்பதைக் காட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மதுஷ் தொடர்பான முன்னைய பதிவு: மதுஷ் விவகாரம்: விமானம் பிந்தியதால், தப்பிய ஆசாமி; கடவுளுக்கு நன்றி சொல்ல, கதிர்காமம் கோயில் சென்றார்