மதுஷ் விவகாரம்: விமானம் பிந்தியதால், தப்பிய ஆசாமி; கடவுளுக்கு நன்றி சொல்ல, கதிர்காமம் கோயில் சென்றார்

🕔 February 18, 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா –

மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இலங்கையில் அடையாளம் கண்டுள்ளனர்.

அவர்களை கைது செய்யும் தேடுதல் படலம் தொடர்கிறது.

நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுஷை விடுவிக்கும் செயற்பாடுகளில் இறங்கியதாக சந்தேகிக்கப்படும் அவர் கைது செய்யப்பட்ட பின் இன்னொரு தகவலும் வெளியாகியது.

இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் வாழும் முக்கியஸ்தர் கிம்புலாஎல குணாவுடன் தொலைபேசியில் பேசி, மதுஷை விடுவிக்க என்ன செய்யலாம்? அதற்கு எவ்வளவு செலவாகும் என்பன போன்ற விடயங்களை இவர் ஆராய்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதிகாரிகளும் நெருக்கம்

இதுவரை நடந்த விசாரணைகளில் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், கலைஞர்களுக்கு அப்பால் அரச அதிகாரிகள் பலரும் மதுஷின் ‘நெட்வெர்க்’கில் இருப்பது தெரியவந்துள்ளது. விமான நிலைய மற்றும் துறைமுகத்தின் முக்கிய சுங்க அதிகாரிகள் மீதும் பொலிஸ் பார்வை திரும்பியுள்ளது.

இதற்கிடையில் ஆரம்பகட்ட விசாரணை மற்றும் பரிசோதனைகள் முடிந்து நீதிமன்றம் ஒரு தீர்ப்பை சொல்லும்வரை, இலங்கை அதிகாரிகள் குழு அங்கு வரவேண்டிய தேவை இல்லையென, டுபாய் பாதுகாப்பு தரப்பு வினயமாக இலங்கையிடம் கூறியுள்ளதாக தகவல்.

அமெரிக்கப் பிரஜை பற்றிய விபரம்

இதேவேளை மதுஷின் வியாபாரங்களை ஏற்று நடத்தியவர்களில் ஒருவரான, ஏற்கனவே இலங்கையில் கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜை – போதைப்பொருள் விவகாரங்களுக்காக அமெரிக்காவால் தேடப்படுபவர் என்பது தெரியவந்துள்ளது.

தலை தப்பியது

இதற்கிடையில் டுபாயில் மதுஷ் நடத்திய விருந்தில் கலந்துகொள்ள செல்லமுயன்று தாமதம் காரணமாக விமான நிலையம் வரை தனது மனைவியுடன் சென்று திரும்பியிருந்தார் கொழும்பின் பிரபல வர்த்தகர் ஒருவர்.

மறுநாள் மதுஷ் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்த இந்த வர்த்தகர், அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. சென்றிருந்தால் தனக்கும் இதே நிலைதான் என்று நினைத்த அவர் இதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்த நினைத்தார்.

கதிர்காமத்துக்கு உடனடியாக புறப்பட்ட அவர், அங்கு கந்தன் ஆலயத்தில் விசேட பூஜைகளை செய்தார். முருக பக்தரான அவர் தன்னை கடவுளே காப்பாற்றியதாக தனது நண்பர்களிடம் கூறிவருகிறார் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல் மதுஷ் தரப்புடன் தொடர்புகளை வைத்து சிக்கிக் கொண்டுள்ள இன்னும் சிலர், கோவில் – பூஜை என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றின் விபரம் கிடைத்தவுடன் உங்களுக்கு தருவேன்.

குப்பையில் கிடந்ததாம் ரத்தினக் கல்

இந்த விசாரணைகளின் போது கிடைத்த இன்னொரு தகவலை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். சுமார் 700 கோடி ரூபா பெறுமதியான ரத்தினக்கல் ஒன்றை மதுஷ் கோஷ்டி கொள்ளையிட்டதல்லவா? அந்த கல் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு பக்கம் விசாரணை நடக்கிறது.

மறுபுறம் இந்த கல்லுக்கு சொந்தக்காரரை தேடி இதுபற்றி விசாரித்தது பொலிஸ். சவூதி அரேபியாவில் கேட்டரிங் வேலையொன்றை தாம் செய்தாரென்றும், அப்படி வேலை செய்த காலத்தில் குப்பைத்தொட்டி ஒன்றில் இருந்து இதனை கண்டெடுத்ததாகவும் அதன் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அப்படியானால் சுங்க அனுமதியின்றி இதனை இலங்கைக்குள் கொண்டுவந்தது எப்படி? உண்மையில் இது குப்பைத் தொட்டியில் இருந்ததா என்பது பற்றியும் விசாரணைகள் நடக்கின்றன. சிலவேளை குறித்த ரத்தினக்கல் துபாயில் கைப்பற்றப்பட்டு, அதற்கு சவூதியில் யாராவது உரிமை கோரினால் ரத்தினக்கல் திருப்பி சவூதிக்கு அனுப்பப்படலாம் என்கின்றன தகவல்கள்.

மதுஷ் மற்றும் சகாக்களை கைது செய்யும் ‘ஒப்பரேஷ’னுக்கு சப்போர்ட் வழங்க டுபாய் சென்றிருந்த விசேட அதிரடிப்படையின் புலனாய்வுத்துறை முக்கியஸ்தர்கள் நாடு திரும்பியுள்ளதாக அறியமுடிகின்றது.

அழுத்தம் வந்தால் சொல்லுங்கள்

அதேவேளை விசேட அதிரடிப்படைக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்புடன் பேச்சு நடத்தியுள்ள ஜனாதிபதி மைத்ரி, இந்த விசாரணைகளில் அரசியல் தலையீடுகள் ஏதும் வந்தால் தம்மிடம் தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.

விசேட அதிரடிப்படை ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரவுள்ளதால், அடுத்தகட்டமாக பல அதிரடிகள் வெளிவரலாம்.

மதுஷ் தொடர்பான முன்னைய செய்தி: மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதியை ‘தீர்த்துக் கட்டும்’ திட்டம்; குத்தகைக்கு வீடு எடுத்துத் தங்கிய மதுஷின் சகா; திக்… திக் தகவல்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்