மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், சிலர் இரட்டை வேடமிடுவதாவதாக லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவிப்பு
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு பகிரங்க கோரிக்கை விடுப்பவர்கள்தான், இந்தத் தேர்தலை பிற்போடுவது நல்லதென்று தன்னிடம் நாடாளுமன்றத்தில் வைத்து கூறுகின்றனர் என, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சில கட்சிகளின் உறுப்பினர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இவ்வாறு கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தங்கள் கட்சிகளின் வாக்குப் பலம் என்ன வெளிப்படுவதை அவர்கள் விரும்பாமையே இதற்கான காரணமென்றும் அவர் கூறியுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் குறித்து கூச்சலிடுபவர்கள் 1987ஆம் ஆண்டு இந்த மாகாண சபைகளை உருவாக்க எதிர்ப்பையும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பையும் தெரிவித்தவர்களாவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தல் மட்டுமல்ல எந்தவொரு தேர்தலுக்கும் தான் தயார் எனத் தெரிவித்துள்ள அவர், மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கான தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லையென்றும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.