மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதியை ‘தீர்த்துக் கட்டும்’ திட்டம்; குத்தகைக்கு வீடு எடுத்துத் தங்கிய மதுஷின் சகா; திக்… திக் தகவல்கள்
– எழுதுபவர் ஆர். சிவராஜா –
மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் துபாயில் கைது செய்யப்பட்ட பின்னர், இலங்கையிலுள்ள சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல் கொள்ளாமல் இருக்கின்றனராம்.
மறுபுறம், சிறையிலிருக்கும் இவ்வாறானவர்களை சந்திப்பதற்கு, அடிக்கடி சிறைக்கு வரும் முக்கியஸ்தர்கள் கூட, இப்போது சிறைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர் எனத் தெரியவருகிறது. பொலிஸ் கண்ணில் படாமல் இருக்கவே இந்த ஏற்பாடு.
மதுஷ் விவகாரத்தில் அமைச்சர்கள் பலர் சிக்கியுள்ளதையும் அவர்களின் போதைப்பொருள் வர்த்தக தொடர்புகள் குறித்தும் நான் எழுதியிருந்தேன்.
குறிப்பாக மலையக அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் மாக்கந்துர மதுஷ் மற்றும் குழுவினருடன் தொடர்பில் இருந்தமை பாதுகாப்பு தரப்பின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை பற்றியும் குறிப்பிட்டேன்.
கொஞ்சம் யோசியுங்கள்
மேற்படி கட்சித் தலைவரின் பெயரை நான் குறிப்பிடா விட்டாலும், பொங்கியெழுந்த அவரின் ஆதரவாளர்கள் தொப்பியை அளவாக போட்டுக்கொண்டு என்னை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
1. எனது தகவல்கள் பிழை என்றால் பாதுகாப்பு தரப்பு சும்மா இருக்குமா?
2. இப்படிப்பட்ட ஒரு விவகாரத்தில் கற்பனை செய்தியோ அல்லது உவமானங்களையோ எழுத முடியுமா?
இது அரசியல் பதிவு அல்ல என்பதால், தகுந்த ஆதாரங்கள் மூலம் நம்பிக்கையான பாதுகாப்பு தரப்புக்களின் தகவல்களை வைத்தே இந்த தொடரை எழுதுகிறேன்.
கேட்க வேண்டியவை
எனவே, தலைவரின் ஆதரவாளர்கள் தலைவரிடம் கேட்கவேண்டியது;
1. அவர் சில மாதங்களுக்கு முன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு போனாரா இல்லையா?
2. தலைவர் பாவிக்கும் முக்கியமான அந்த பொருளை அவருக்கு வழங்குவது யார்?
3. தலைவரின் சகாக்கள் மாக்கந்துர மதுஷுடன் நேரடித் தொடர்புகளை வைத்திருந்தனரா இல்லையா?
4. இப்போது அதே சகாக்கள் முக்கியமான அமைச்சர்களின் பின்னால் ஓடி அடைக்கலம் தேடுவது ஏன் ?
5.துபாயில் நடைபெறும் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு தலைவர் எந்த சம்பந்தமும் இல்லாமல் அழைக்கப்படுவது ஏன் ?
என்ற கேள்விகளைத்தான் .
எனது தகவல்கள் தவறு என்று கூறினால், மேலும் பல விடயங்களை நான் ஆதாரங்களுடன் வெளியிட வேண்டிவரலாம். அது அவரின் மாற்று அரசியல்வாதிகளுக்கு சாதகமாக போய்விடக் கூடாதென்பதால், நான் பொறுமையாய் இருக்கிறேன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
இவற்றை எழுதும்போது வரும் அச்சம், அனர்த்தம் எனக்குத் தெரியும். ஆனால் பேய்க்கு பயந்தால் சுடுகாட்டில் வீடு கட்ட முடியாது.
ஊடகவியலாாளர்களும் உள்ளடக்கம்
தமிழ் தலைவர் மட்டுமல்ல சிங்கள அமைச்சர் ஒருவரும் இருக்கிறார். அவருக்கு போதைப்பொருள் இல்லாமல் இருக்க முடியாது என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன.
பல எம்.பி.கள் – கலைஞர்கள் – ஊடகவியலாளர்கள் – வர்த்தகர்கள் கூட இதில் சிக்கியுள்ளனர்.
சரி விடயத்துக்கு வருவோம்.
மாக்கந்துர மதுஷ் அவரது ஊரில் ‘வாசனா’ என்று அழைக்கப்படுவார். சகாக்கள் அவருக்கு வைத்த பெயர் .லொக்கு ஐயா’ (பெரியண்ணன்).
ஜனாதிபதியை கொல்வதற்கான திட்டம்
லொக்கு ஐயா மதுஷ் – ஜனாதிபதி மைத்ரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதில் வசமாக சிக்கியுள்ளார்.
மதுஷின் சகா மதுஷான் என்பவர் துப்பாக்கி சுடுவதில் வல்லவர் என்பதால், இந்த கொலைச் சதி முயற்சிக்கு அவரை தேர்ந்தெடுத்த மதுஷ், மட்டக்களப்பில் வைத்து இந்த ‘மேட்டரை’ செய்யுமாறு கேட்டுள்ளார்.
இதற்காக மட்டக்களப்பில் வீடு ஒன்று குத்தகைக்கு பெறப்பட்டது. அதற்கான காசை மதுஷிடமிருந்து பெற்று மதுஷானுக்கு வழங்கியவர் ‘அஹுங்கல்லே புத்தி’ என்பவர். புத்தியும் இப்போது துபாயில் மதுஸுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மதுஷான் கடந்த வருடம் மே – ஜூன் கால எல்லைக்குள் மட்டக்களப்பில் இருந்து 80 துப்பாக்கிகளை அஹங்கல்லவுக்கு கொண்டுவந்துள்ளார். அதில் பத்து ஆயுதங்களை கஞ்சிப்பான இம்ரானின் சகாக்களுக்கு கொடுத்துவிட்டு மிகுதியை புதைத்துவிட்டாரென சொல்லப்படுகிறது.
அதேபோல சிறைச்சாலை பஸ் ஒன்றை தாக்கி முக்கிய நபர்களை இம்மாதம் கொல்வதற்கு போட்டிருந்த திட்டமும் வெளியாகியுள்ளது.
ட்ரோன் கமராவில் படமெடுத்த நாலக்க
இப்போது சிறையில் உள்ள டீஐஜி நாலக்க சில்வா கடந்த வருடம் ஸ்னைப்பர் துப்பாக்கி மற்றும் எல்.எம்.ஜி. துப்பாக்கிகள் இரண்டை ஆயுத களஞ்சியத்தில் இருந்து பெற்றமை ஏன் என்பது பற்றியும் ஆராயப்படுகிறது. விசேட தாக்குதல் பிரிவொன்றை அவர் அமைக்க முயன்றது ஏன் என்பது பற்றியும் தேடப்படுகிறது.
‘ட்ரோன்’ கெமரா ஒன்று நாலக்க சில்வாவிடம் இருந்து மீட்கப்பட்டதை விசாரித்த பொலிஸ், அது ஏன் என்று வினவியபோது, அது கண்டி திகன வன்முறை சம்பவத்தை படமாக்க பயன்படுத்தப்பட்டதென நாலக்கவால் பதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அது குறித்துத் தேடியதில், ஜனாதிபதியின் அரசியல் கூட்டங்கள் தொடர்பான விடியோக்களே இருந்துள்ளன. அப்படியானால் இதன் பின்னணி என்ன? இந்த கமராவை துபாயில் இருந்து அனுப்பியது யார்? என்பது பற்றி விசாரிக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி கொலைச்சதி திட்டத்தை வெளிப்படுத்திய நாமல் குமாரவை ஒரு தடவை அணுகிய டீஐஜி நாலக்க, வேறு ஒரு பெயரில் பேஸ்புக் கணக்கை ஆரம்பித்து படையினரை கடுமையாக விமர்சிக்குமாறு கூறியிருந்தார் என்று செய்திகள் வெளிவந்தனவல்லவா?
இந்த சம்பவத்தை அரங்கேற்ற முன்னரும் பின்னரும் – படையினரின் பலவீனமே இதற்கு காரணமென ஒரு கருத்தை உருவாக்குவதே இந்த திட்டத்தின் சூட்சுமம் என, பொலிஸார் விசாரணைகளில் அறிந்துள்ளனர் என சொல்லப்படுகிறது.
ஊரில் ஹீரோ
மாக்கந்துர மதுஷின் உண்மையான ஊர் கம்புறுப்பிட்டி. அவரின் முதல் மனைவியே மாக்கந்துரவை சேர்ந்தவர். தீவிர ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளரின் மகளான அவர் மதுஷை விட்டு பிரிந்தே வாழ்கிறார்.
வெளியில் கெட்டவனாக வாழ்ந்தாலும் ஊரில் மதுஷின் பெயருக்கு பெரும் ஆதரவு உள்ளது. அங்கு விசாரணைகளுக்கு சென்ற பொலிஸாரிடம் அனைவரும் மதுஷுக்கு ஆதரவாகவே பேசியுள்ளனர்.
அரச படைகளால் தாய் படுகொலை – தந்தையின் உடனடி மறுமணம் – வறுமை காரணமாக போராடிய மதுஷ் தனது தம்பியை பொலிஸார் கொன்றதும் சமூக விரோதியாக மாறியுள்ளார். பொய் வழக்குகள் அவர்மீது போடப்பட்டமையும் இந்த நிலைமைக்கு ஒரு காரணமென அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சாதாரணதரம் வரை கல்வி பயின்ற மதுஷ், அறநெறி பாடசாலைக்கு சென்றதே இல்லையென அவரது சிறிய தாயார் தெரிவித்துள்ளார். கஷ்டப்பட்டு வளர்த்த காரணத்தினால்தான் தனது பாட்டியின் மரணத்திற்கு (2015) கடும் பாதுகாப்புடன் வந்து சென்றிருக்கிறார் மதுஷ்.
‘தக்பீர்’ சொல்லி தப்பப் பார்த்தவர்கள்
துபாயில் மதுஷுடன் கைதானவர்களில் பலர் – கைகள் இரண்டையும் தலைக்குப் பின்னால் கட்டியபடி இருக்கிறார்களே அதற்கு என்ன காரணம் என்று உயர்மட்ட பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர் ஒருவரிடம் கேட்டேன்.
“ஓ அதுவா… அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்; கைது செய்யப்பட்ட கையோடு அவர்கள் அனைவரும் தக்பீர் செய்து தாங்கள் மதப் பண்புகளை கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்கள் என்று காட்ட முயன்றுள்ளனர். ஆனால் அது எடுபடவில்லை. விசாரணை முடிந்த பின்னர் பார்த்துக்கொள்வோம் என்று கூறிவிட்டது துபாய் பொலிஸ். அப்போது எடுக்கப்பட்ட படமே அது. மற்றும்படி வேறு காரணங்கள் இல்லை” என்று விளக்கினார் அந்த முக்கியஸ்தர்.
‘கடுப்பில்’ இருக்கும் தாவூத் இப்றாஹிம்
இப்போது மதுஷ் விவகாரத்தில் இலங்கை அரசை விடவும், துபாய்க்கு அதிக அழுத்தத்தை கொடுக்கிறது தாவூத் இப்றாஹிம் தரப்பின் நெட்வெர்க்.
ஏனெனில் 300 கிலோ ஹெரோயினை வாங்கி அதற்கான 600 கோடி ரூபா பணத்தை கொடுக்க இழுத்ததடித்து, பின்னர் அதனை வழங்க மதுஷ் மறுத்ததே அதற்கான காரணம்.
மறுபுறம் மதுஷின் பணத்தை வாங்கி முதலிட்டு வியாபாரம் நடத்திய ஒரு ‘க்ரூப்’, அவர் வெளியில் வந்துவிடக் கூடாதென்று கங்கணம் கட்டி செயற்படுகிறதாம்.
எப்படியோ மதுஷ் விவகாரம் தொடர்கதையாகத்தான் இருக்கப் போகிறது.
மதுஷ் தொடர்பான முன்னைய செய்தி: 700 கோடி ரூபாய் ரத்தினக் கல்; பன்னிப்பிட்டியவில் கொள்ளையிட்ட மதுஷ்: திரைப்படப் பாணியில் சம்பவம்