மதுஷுடன் தொடர்பிலிருந்த கட்சித் தலைவர்; துபாய் சென்று ‘கிளுகிளுப்பு’ அனுபவித்த அமைச்சர்: கசியும் தகவல்களால், அதிரும் கொழும்பு
– எழுதுபவர் ஆர். சிவராஜா –
துபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் விவகாரத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள், கொழும்பு அரசியலை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன.
துபாயில் மதுஷிடம் கைப்பற்றப்பட்ட தொலைபேசி அழைப்பு விபரங்கள் மற்றும் அவரது சகாக்களிடம் கிடைத்த தகவல்களை அரச தேசிய புலனாய்வுத்துறை ஆராய்ந்தது.
அப்போது கிடைத்த தகவல்கள் பெரிதும் அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன.
சிக்கிய அரசியல் ‘தலை’கள்
நாடாளுமன்ற உறுப்பினரான அரசியல் கட்சி ஒன்றின் தலைவர், தேசியக் கட்சி ஒன்றில் முக்கிய பதவி ஒன்றை வகித்த எம்.பி மற்றும் கடந்த அரசாங்கத்தில் போதைப்பொருள் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட எம்.பி ஒருவர் என மூவர்; மதுஷ் தரப்புடன் நேரடி தொடர்புகளை கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.
அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் என்று சொல்லப்படுபவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய மலைநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் (தமிழ் முற்போக்கு கூட்டணியை சேர்ந்த எவரும் அல்லர் இவர் அடிக்கடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுவந்தமை ஏன் என்பது பற்றி தேடப்படுகிறது. அவருடன் இருக்கும் சகாக்களும் பாதாள உலக கோஷ்டியுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
சீனியர் அமைச்சர்
இவர்கள் மூவரை விடவும், மதுஷ் தரப்பின் அழைப்பின் பேரில் சில மாதங்களுக்கு முன்னர் துபாய்க்கு ‘சுற்றுலா’ சென்ற சீனியர் அமைச்சரொருவர், அங்கு உல்லாசத்தில் இருந்துள்ளமையும் – அவர் துவாயுடன் ஹோட்டலில் ஜாலியாக இருக்கும் கிளுகிளுப்பான படங்கள் சிலவும் புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்துள்ளதாக தகவல்.
கடந்த தேர்தல் காலங்களில் இந்த அமைச்சருக்கு மதுஷ் குழுவினர் கையை வீசி நிதி மற்றும் இதர உதவிகளை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் பற்றிய முழு விபரங்கள் கடந்த செக்கியூரிட்டி கவுன்சில் கூட்டத்தின்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது . அவர்கள் தொடர்பில் ரகசிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. விரைவில் முக்கிய அறிவிப்பு வெளிவரலாமென சொல்லப்படுகிறது.
இந்த அரசியல்வாதிகள் சிக்கிய அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜனாதிபதி மைத்ரி , என்ன அழுத்தங்கள் வந்தாலும் இவர்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதில் இருந்து பின்வாங்கக் கூடாதென, பாதுகாப்பு தரப்புக்கு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விஷம் வைத்து கொல்லும் திட்டம்
ஜனாதிபதியை கொல்ல சதி செய்ததாக சொல்லப்படும் விடயத்தில் மதுஷின் பெயர் அடிபட்டுள்ள்ளதல்லவா? அது ஒருபுறமிருக்க, மறுபுறம் தங்களை வஞ்சம் தீர்க்கும் விசேட அதிரடிப்படையை சேர்ந்த பலரை ஒரே நேரத்தில் போட்டுத்தள்ளவும் பெரிய சதி ஒன்றை மதுஷ் டீம் வகுத்திருந்தமையும் தெரியவந்துள்ளது.
விசேட அதிரடிப்படை முகாம்களில் உள்ள சமையல்காரர்களை கையில் போட்டுக்கொள்வது, பின்னர் அவர்களின் ஊடாக உணவில் நஞ்சு கலந்து ஒரே நேரத்தில் பலரை பலியெடுப்பது; இது தான் திட்டம்.
எஸ்.ரி.எஃப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப் – தொடர்ந்து தொல்லை கொடுப்பதால், இதனை செய்ய கடந்த வருடமே திட்டமிட்டாலும், அப்போது இந்த சதியை முகர்ந்த லத்தீப், சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததால் அது தவிர்க்கப்பட்டது. இப்போது இவர்கள் கைது செய்யப்பட்டவுடன் அந்த சதியின் பல விடயங்கள் வெளிவந்துள்ளன.
அதிரடிப்படை முகாம்களின் சமையல்காரர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வழங்கி, இந்த திட்டத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டாலும் அது தோல்வியில் முடிந்தது.
இப்போது அதுபற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மதுஷ் மற்றும் சகாக்கள் மீதான விசாரணைகளுக்கு உதவும் வகையில் இலங்கையில் இருந்து ஒரு குழு துபாய் செல்வதாக இருந்தது. ஆனால் அது தேவைப்படவில்லை. ஏனெனில் நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி விசாரணைகளை செய்யும் துபாய் பொலிஸார், பல தகவல்களை நாளாந்தம் பெற்று வருகின்றனர். எனவே இலங்கை குழு அங்கே வருவதில் அர்த்தமில்லையென துபாய் பொலிஸ் கருதுவதாக சொல்லப்படுகிறது.
இரண்டு பக்க அச்சம்
இதற்கிடையில் மதுஷின் சகாக்கள் பலர் இலங்கையில் தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. பொலிஸின் தேடுதல் பயத்துக்கு அப்பால் – சில ரகசியங்கள் கசிந்துவிடக் கூடாதென அரசியல்வாதிகளால் தாங்கள் தூக்கப்படலாம் என்ற அச்சமே அதற்கு காரணம் .
மதுஷ் நடத்திய பிறந்த நாள் பார்ட்டியில் கலந்துகொள்ள மனைவியுடன் புறப்பட்டு, கொழும்பு விமான நிலையத்தில் விமானம் தாமதமானமை காரணமாக திரும்பி வந்த வர்த்தகர் ஒருவர் குறித்தும் தீவிர விசாரணைகள் நடக்கின்றன.
மதுஷின் துபாய் வீட்டை சோதனையிட்ட அந்நாட்டு பொலிஸார், அங்கு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். ஆயுதங்களை விலைக்கு வாங்கியமை குறித்த ஆவணங்கள் அதில் முக்கியமானவை என்று சொல்லப்படுகிறது.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் தொடரவுள்ளன.
மறுபுறம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மதுஸுக்கு எதிரான கோஷ்டி தலைதூக்குவதை தடுக்கும் விடயத்திலும், பொலிஸ் கண்ணாக இருக்கிறது.
மதுஷ் தொடர்பான முன்னைய செய்தி: ட்ரோலர் படகில் நாட்டுக்கு வந்து போன மதுஷ்; நடிகர் ரயனின் காரை ‘சம்பவங்களுக்கு’ பயன்படுத்தியதாக சந்தேகம்