கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளுக்கு மூன்று மாதங்களில் தீர்வு: ஆளுநர் தலைமையிலான சந்திப்பில் தீர்மானம்

🕔 February 15, 2019
கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற காணிப் பிரச்சினைகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பணிப்புரைக்கமைவாக தீர்த்து வைப்பதற்கான விஷேட சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் இடம் பெற்றது.

இந்த சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் நோக்கும் காணி தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்பட்டு, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின்ஆலோசனைகள் பெறப்படுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
பின் இரண்டு வார காலத்துக்குள் பிரச்சினைகள் காணப்படுகின்ற பிரதேசங்களுக்குப் பொறுப்பான செயலாளர்கள், அந்தப் பிராந்தியங்களிலுள்ள நாாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதேச செயலக மட்டத்தில் கலந்துரையாடி முழுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் முடிவு காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்குள் மாவட்ட செயலகம் இது தொடர்பான அறிக்கைகளை ஜனாதிபதி நியமித்துள்ள தேசிய மட்ட குழுவிற்கு சமர்ப்பிக்க பட வேண்டும் என்றும் இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது.மூன்று மாத காலத்திற்குள் இந்தக் காணிப் பிரச்சினைகள்  தீர்க்கப்பட்டு ஜனாதிபதியினால் ஆளுநருடைய வேண்டுகோளின் பேரில் தற்போது நியமிக்கப்பட்டு இருக்கின்ற உயர் மட்ட பிரதி வன பரிபாலன சபையின் பிரதி ஆணையாளர் நாயகம் , பிரதி காணி ஆணையாளர் நாயகம், பிரதி வன விலங்கு திணைக்கள ஆணையாளர் நாயகம் மற்றும் பிரதம தொல் பொருள் ஆணையாளர் ஆகியோரைக் கொண்ட குழு விரைவில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்து, அந்தக் காணிகள் மக்களுக்கு தேவையானதா? என இனம் கண்டு, உடனடியாக அக் காணிகளை விடுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும்
இந்த நடவடிக்கைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நடைபெற வேண்டும் என்றும் அவை உரிய காலத்திற்குள் மாகாண காணி ஆணையாளருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது ஆளுநர் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் ராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அலிஸாஹிர் மொளலானா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிநேசன், எஸ். யோகஸ்வரன், அரசாங்க அதிபர் உதயகுமார், வன பரிபாலன திணைக்களம், வன ஜீவராசிகள் பரிபாலன திணைக்களம், தொல் பொருள் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் ஆகியவற்றினுடைய தலைவர்கள், மாவாட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(ஆளுநரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்