பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், மனந்தெளி நிலைப்பயிற்சி முகாம்
– எம்.ஐ.எம். அஸ்ஹர் –
உயர்தர உயிரியல் , கணித , வர்த்தக, கலை மற்றும் தொழிலநுட்ப பிரிவு மாணவர்களுக்காக இந்தியா தந்திர யோகா வித்யா பீடம் ஒழுங்கு செய்திருந்த மனந்தெளி நிலைப்பயிற்சி முகாம் இன்று வெள்ளிக்கிழமை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் கே. தம்பிராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், இந்தியா தந்திர யோகா வித்யா பீட – இலங்கை கிளை பொறுப்பாளரும் பயிற்சிக்கான ஆலோசகருமான திருமதி. சுசீலா ராஜா பிரதம வளவாளராக கலந்து கொண்டார்.
மாணவர்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு துறைகளிலும் எதிர்நோக்கும் சவால்களை சமாளித்து முன்னேற பல புதிய தந்திரோபாயங்களை உள்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்கள் நீங்குவதால் தங்களுக்குள் மறைந்து காணப்படும் சுய திறமைகளை அதிகரிக்க முடியம் எனவும் இதற்காக மனந்தெளி நிலைப்பயற்சி சிறந்ததொரு தந்திரோபாயமாக அமையும் என்றும், இதன்போது திருமதி. சுசீலா ராஜா தெரிவித்தார்.
“மனித மனமானது எந்த நேரமும் அலைந்து திரியும் தன்மையைக் கொண்டது. சில வேளைகளில் இது தன்னியக்க நிலையில் இயங்கவும் செய்கின்றது. இந்நிலையில் ஒரு நிலைப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது. அதுதான் எமக்கும் எமது சிந்தனைக்கும் இடைநடுவில் உள்ள இடைவெளியை வெளிக்காட்டி , சிந்தனைகள் முகில் கூட்டங்கள் போல் கலைவதை மளந்தெளி நிலைப் பயிற்சி மூலம் பெற்றுக் கொள்ளலாம்” அவர் விபரித்தார்.
இந்நிகழ்வில் இந்தியா தந்திர யோகா வித்யா பீடத்தைச் சேர்ந்த திருமதி. தர்மநாயகி ஹரிகரன், திருமதி. ஜுவனேஸ்வரி தர்மரெட்ணம், திருமதி. விஜயபரணி ஜயசுதன் ஆகியோரும் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.