புல்மோட்டைக்கு தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்
– ஹஸ்பர் ஏ ஹலீம் –
அதிக சனத்தொகை கொண்ட புல்மோட்டை பிரதேசத்துக்கு தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை என்பன உருவாக்கப்பட வேண்டும் என்று, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
புல்மோட்டை பகுதியில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை திறந்து, மக்கள் பாவனைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கையளித்து விட்டு உரையாற்றும் போதே இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய பிரதியமைச்சர்;
“துரித அபிவிருத்தியில் பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். அபிவிருத்திகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்குவதன் மூலமாக, மிக விரைவான திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படவுள்ளது. பாரியளவிலான திட்டங்களை கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சுற்றுலாத்துறை என்பனவற்றில் மேற்கொள்ளளப்படவுள்ளன.
மாகாண சபைத் தேர்தலை விரைவில் எதிர்நோக்கவுள்ளோம். சரியான திட்டங்களை வகுத்து மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்களை வழங்க வேண்டும்.
சரியான வழிகாட்டல்கள் ஊடாக கிராமிய அபிவிருத்தி துரிதமாக இடம் பெற வேண்டும். அபிவிருத்திகளில் கிராமங்கள் அதிகமாக உள்வாக்கப்படும்.
மீள்குடியேற்ற அமைச்சு, மீள்குடியேற்ற செயலணி ஊடாக பல முன்னெடுப்புக்கள் இப் பகுதியில் இடம் பெறவுள்ளன.
மாகாணசபை தேர்தலில் அதிகாரங்களை கைப்பற்றுவதன் ஊடாக எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கையை பலப்படுத்துவோம்” என்றார்.