03 மில்லியன் துரோகமும், பாகிஸ்தான் ‘டீம்’ சீவிய ஆப்பும்: மதுஷ் மாட்டிய, கதையின் கதை

🕔 February 9, 2019

– ஆர். சிவராஜா –

துபாயில் மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்பட்ட பின்னர் இப்போது புதிய தகவல்கள் வெளிவந்தமுள்ளன.

1979 பெப்ரவரி 21 ஆம் திகதி பிறந்த மதுஷ் இம்மாதம் தனது பிறந்த தினத்தை விமரிசையாக கொண்டாட இருந்தாராம்.

அதில் இலங்கையின் முன்னணி வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் உட்பட்ட பலர் கலந்துகொள்ள ஏற்பாடாகியிருந்தது. அவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் இப்போது தேடப்படுகின்றன.

தமிழ் தெரியும்

அம்பாறையில் ஆரம்பகாலத்தில் கராஜ் ஒன்றில் வேலை செய்த மதுஷ், பின்னர் நன்கு தமிழ் பேசவும் கற்றுக் கொண்டார். இந்திய போதைப்பொருள் வர்த்தகர்கள் பலருடன் தொடர்புகொள்ள இது பெரிதும் உதவியுள்ளது.

ஜே.வி.பி பிரச்சினை காலத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் தனது தாய் மாலனி சமரசிங்கவை இழந்த மதுஷ் – தனது தந்தை லக்ஷ்மன் மறுமணம் செய்து கொண்டதால், பாட்டி மற்றும் பெரிய தாயின் கவனிப்பில் வளர்ந்தார். தாய் இறந்த விதமே அவரை மனதளவில் பாதித்து தனித்து செயற்பட ஆரம்பித்தார் எனக் கூறப்படுகிறது.

முஸ்லிம் பெயரில் வந்து போனார்

சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் பெயரில் உள்ள கடவுச்சீட்டு ஒன்றை பயன்படுத்தி – மதுஷ் இலங்கை வந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது பாட்டியின் மரண வீட்டுக்கும் அவர் வந்து சென்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. தனது தந்தை இறந்தபோது, அந்த பூதவுடலுக்கு ஹெலியில் இருந்து மலர் தூவ அரசியல்வாதி ஒருவரின் ஊடாக மதுஷ் ஏற்பாடு செய்தமையும் விசாரணைகளில் அறியக்கிடைத்துள்ளது.

ஆரம்பகாலத்தில் மாத்தறை கம்புறுப்பிட்டியில் கொலை கொள்ளைகளை நடத்திய மதுஷ் – சிறைக்கு சென்ற பின்னரே, பாதாள உலகத்தின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பிரபல்யமடையத் தொடங்கினார். பின்னர் நீர்கொழும்புக்கு வந்து கம்பஹா மாவட்டத்தில் இருந்தபடி இயங்கிய மதுஷ், அங்கும் பல சம்பவங்களில் தொடர்புபட்டு சிறை சென்றார்.

ஆப்பு வைத்ததால், வந்த வினை

மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்பட உதவிய இன்னுமொரு காரணமும் இப்பொது வெளிவந்துள்ளது.

கஞ்சிப்பான இம்ரான் ஊடாக மிகமுக்கிய பாகிஸ்தான் ஹெரோயின் வர்த்தக டீம் ஒன்றின் தொடர்பு மதுஸுக்கு கிடைத்தது. அவர்களின் ஊடாக போதைப்பொருள் வியாபாரம் கொடிகட்டி பறந்த நிலையில் – கடந்த வருடம் அவர்களுடனான கொடுக்கல் வாங்கல் ஒன்றுடன் பெரிய முரண்பாடு உருவாக ஆரம்பித்தது.

சுமார் 03 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பணம் ஏதோ ஒரு காரணத்திற்காக பாகிஸ்தான் டீமுக்கு வழங்க முடியாதென கையை விரித்தார் மதுஷ். அங்கும் விரிசல் ஆரம்பித்தது.

அந்த நேரம் பார்த்து – இலங்கை புலனாய்வுத்துறை மதுஷை தேடுவதை அறிந்த பாகிஸ்தான் டீம், மதுஷ் தொடர்பில் தங்களுக்கு தெரிந்த தகவல்களை பரிமாற ஆரம்பித்தது. மதுஷை தேடிய விசேட அதிரடிப்படை – பல முக்கிய தகவல்களை இந்த பாகிஸ்தான் டீமிடம் இருந்து பெற்றுக் கொண்டது.

இந்த பாகிஸ்தான் டீம் – பிரபல தாதா தாவூத் இப்றாகீமின் கண்ட்ரோலில் இருப்பதால், இப்போது மதுஷ், பொலிஸ் பிடியில் வெளியில் வராமல் இருக்க தனது முழு செல்வாக்கையும் பயன்படுத்தி அமீரக ஆட்சியாளர்களுக்கு அவர்கள் அழுத்தத்தை வழங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

அதேபோல மதுஷினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மிக முக்கிய தொழிலதிபர் ஒருவரும் இவர்களை கண்டுபிடிக்க துபாயில் உள்ள தனது செல்வாக்கை பயன்படுத்தி உதவியுள்ளாரென சொல்லப்படுகிறது.

துப்பாக்கி ஏந்த நபர்களின் பாதுகாப்பு

துபாயில் எங்கு சென்றாலும் பாதுகாப்புக்கு நவீன கைத்துப்பாக்கி – பத்துக்கும் மேற்பட்ட மெய்ப்பாதுகாவலர்கள் சகிதமே செல்வார் மதுஷ். அன்றும் கூட, பிறந்த நாள் நிகழ்வில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மதுஷ் வந்திருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அன்றைய தினம் மதுஷின் இரண்டாவது மனைவி ஏன் தாமதமாக நிகழ்வுக்கு வந்தார்? அதற்கான காரணம் என்ன என்பது இதுவரை புரியாத புதிராக இருக்கிறது.

சொத்துக்களின் பெறுமதி

துபாயில் மதுஷுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் இரண்டாவது மனைவியின் பெயரில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவற்றின் பெறுமதி 500 கோடி ரூபாவுக்கும் அதிகமென கூறப்படுகிறது.

மதுஷ் சகிதம் கைது செய்யப்பட்ட நடிகர் ரயனுக்கு சொந்தமான சொகுசு வாகனம் ஒன்று நேற்று மிரிஸ்ஸ ஹோட்டலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அதில் இருந்த கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்

லலித்குமார, ருக்ஸான் மற்றும் சஞ்சீவ ஆகிய சிறைச்சாலை உத்தியோத்தர்களே கைதாகியுள்ளனர்.

இவர்களில் உபாதைக்குள்ளான நிலையில் இருக்கும் லலித்குமார என்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் விடுமுறையில் இருந்தாலும், உத்தியோகபூர்வ விடுமுறை பெற்றே துபாய் சென்றுள்ளார்.

2017 பெப்ரவரி 27 ஆம் திகதி களுத்துறை சிறையில் இருந்து சென்ற ‘கடுவெல சமயங்’ உட்பட்டோரை சுட்டுத்தள்ள, அங்கொட லொக்காவுக்கு உள்ளிருந்தே தகவல் வழங்கியவர் இவர்தானென கண்டறியப்பட்டுள்ளது.

உடன் கைதானவர்களின் நிலை

கைது செய்யப்பட்டோரில் கம்புறுப்பிட்டி மீன் வியாபாரி லங்கா சஜித் பெரேரா , கம்புறுப்பிட்டி பிரதேச சபை சிற்றூழியர் சரித் கொடிக்கார ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களின் உறவினர்களது வீடுகள் சோதனையிடப்பட்டுள்ளன.

மதுஷின் இலங்கை சொத்துக்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன. பல வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவரிடம் இருந்து உதவிகளை வாங்கிய கலைஞர்கள் நடிகர்கள் பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மதுஷ் இலங்கைக்கு கொடுவரப்படக் கூடாதென வலியுறுத்தி மறைமுகமாக அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அரசியல்வாதிகள் பலர், மதுஷின் வியாபார பங்காளர்கள் என அறியக்கிடைத்துள்ளது.

துபாயில் கைதானவர்களில் நடத்தப்பட்ட இரத்த பரிசோதனையில், மது அல்லது போதைப்பொருள் பாவிக்காத 08 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கை தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் பாடிய பாடகர்கள் சிலரும் கைதானோரில் இருப்பதால், அவர்களின் உறவினர்கள் பலரும் கதிகலங்கி போயுள்ளனர்.

தவணைக்கு 04 கோடி – சட்டத்தரணிகளிடம் பேச்சு

இதற்கிடையில் துபாய் நீதிமன்றில் ஆஜராகும் தகுதி கொண்ட 08 சட்டத்தரணிகளிடம் இந்த வழக்கில் மதுஷ் சார்பில் ஆஜராக கேட்கப்பட்டுள்ளது. ஒரு தவணைக்கு மூன்று முதல் நான்கு கோடி ரூபா கட்டணம் என்ற அடிப்படையில் சட்டத்தரணிகள் சிலர் இதில் ஆஜராக உத்தேசித்தாலும், அரசியல் காரணங்களினால் அவர்கள் பின்வாங்குவதாகவும் அறியமுடிகின்றது.

இந்த நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் அமீரக அல்-அரபா பொலிஸ் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகள் முடிந்தால் மாத்திரமே, அவர்களை என்ன செய்யலாம் என்பது பற்றி முடிவெடுக்க முடியுமென இலங்கைக்கு துபாய் அறிவித்துள்ளது.

எப்படியோ அமீரக சட்டங்களில் இருந்து மதுஷ் கோஷ்டி தப்புவது கடினமான விடயம். அதற்கும் மேல், இலங்கை அரசின் நாடுகடத்தல் முயற்சிகளுக்கு மேலாக, மதுஷின் எதிரி கோஷ்டி அவர்களை வெளியில் வரவிடாமல் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்வதாக ராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

செய்து முடிக்கும் தீர்மானத்தில் ஜனாதிபதி

ஆனால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், அவர்களை இலங்கைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஜனாதிபதி மைத்ரி நேரடியாகவே களத்தில் இறங்கவுள்ளாரென சொல்லப்படுகிறது. துபாய் ஆட்சியாளருடன் நேரடியாகவே பேசி, தேவைப்படின் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்றை உடனடியாக செய்யவும் மைத்ரி தயாராகியுள்ளார். அதற்காக அவர் சட்ட மா அதிபரின் ஆலோசனையையும் பெற்றுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு ஒருபுறமிருக்க – இந்த மதுஷ் நெட்வெர்க்கில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய புள்ளிகளும் சிக்கியிருப்பதால், இந்த விவகாரத்தை மைத்ரி இலேசாக விடமாட்டார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

ஆனால் அமீரக நீதிமன்றத்தில் இவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டால், தண்டனையும் அங்கேதான் கிடைக்கும்.

மதுஷ் மற்றும் அவரது சகாக்களின் உதவிகளைப் பெற்று, அவரின் பணத்தை வைத்து வயிறு வளர்த்த – வளர்க்கும் புள்ளிகளின் பிரார்த்தனையும் அதுவேதான்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்