மாக்கந்துர மதுஷின் துபாயிலுள்ள 04 வீடுகள் முற்றுகை; 05 கோடி ரூபா பணமும் சிக்கியது: தொடர்கிறது அதிரடி
– ஆர். சிவராஜா –
மாக்கந்துர மதுஷின் துபாய் வீட்டில் இருந்து 05 கோடி ரூபா ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு சொந்தமான 04 வீடுகளும் முற்றுகையிடப்பட்டன.
பிரபல பாடகர் அமல் பெரேராவின் மஹரகம வீட்டில் விசேட அதிரடிப்படை அதிரடி தேடுதல் நடத்தியுள்ளதோடு, அவருக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்தும் தீவிர விசாரணைகள் நடைபெறுகின்றன.
இதேவேளை, பாடகர் அமல் பெரேராவின் மஹரகம வீட்டில் கொக்கெய்ன் போதைப்பொருள் பாவித்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
கைதுசெய்யப்பட்ட நடிகர் ரயனுக்கு சொந்தமான தெஹிவளை வீட்டில் டிஜிட்டல் தராசுடன் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தை நேரடியாகவே கையாண்டுவரும் ஜனாதிபதி மைத்ரி , கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ராஜதந்திர கடவுசீட்டை வழங்க அங்கீகாரம் வழங்கியவர்களை கண்டறியுமாறு உத்தரவிட்டுள்ளார்.
நேற்றும் இன்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார செயலர் ரவினாத ஆரியசிங்க ஆகியோருடன் ஜனாதிபதி விசேட பேச்சு நடத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.
துபாயில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மாத்தறை பகுதி வர்த்தகர், பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் , பொலிஸ் அதிகாரி ஒருவர் , களுத்துறை சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறித்து தனித்தனி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.