தப்பினார் லொக்கா; அகப்பட்டார் அதிபர்: மாகந்துர மதுஷ் கைது பற்றிய, கூடுதல் தகவல்கள்

🕔 February 7, 2019

– ஆர். சிவராஜா –

மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களை துபாயிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்த, அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

கைது செய்யப்பட்டவர்களில் அஹூன்கல்ல புத்தி, அமில ஆகியோர் மிக முக்கிய புள்ளிகளென சொல்லப்படுகிறது.

இன்னுமொரு முக்கிய புள்ளியான மாளிகாவத்தையின் கஞ்சிப்பான இம்ரான் மற்றும் அவரது சகாக்கள் பாஸ், பைசர், ஷியாம், அஜ்மி ஆகியோரும் சிக்கியவர்களில் அடக்கம். மாளிகாவத்தை பகுதி பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரும் இவர்களில் உள்ளடங்குவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் சொல்கின்றன.

தப்பியோடிய ‘லொக்கா’

துபாயில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்வின்போது, சிகரெட் பிடிப்பதற்காக ஹோட்டலை விட்டு வெளியே வந்து மீண்டும் ஹோட்டலுக்குள் செல்ல முயன்றபோது பொலிஸாரை கண்டு தப்பியோடிய அங்கொட லொக்கா மற்றும் அவரது இரு கூட்டாளிகளை சிசிரிவி காட்சிகளின் உதவியுடன் கைது செய்ய துபாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கொட லொக்காவின் முக்கிய சகாக்கள் இருவர் பொலிஸாரிடம் சிக்கியிருப்பதால் அவர் தங்கியிருக்கும் பகுதி மற்றும் அவரது நட்பு வட்டாரங்கள் குறித்து தேட ஆரம்பித்துள்ள துபாய் பொலிஸ், பெரும்பாலும் அவர் கைதுசெய்யப்படுவார் என்றே நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

அரசியல்வாதிகள் அழுத்தம்

இதற்கிடையில் மதுஸுடன் தொடர்பில் இருந்த இலங்கை அரசியல்வாதிகள் சிலர், அவரை இங்கு கொண்டுவரக்கூடாதென அரசாங்கத்துக்கு மறைமுக அழுத்தங்களை வழங்க ஆரம்பித்துள்ளனரெனவும் சொல்லப்படுகிறது.

துபாயில் மதுஸுக்கு சொந்தமான சொத்துக்களை தேட ஆரம்பித்துள்ள பொலிஸ், அவற்றுக்குரிய ஆவணங்களை மீட்டுள்ளது. இலங்கையில் இருந்து வேலைவாய்ப்புக்காக ஆட்களை தருவிக்கும் ‘மேன்பவர்’ நிறுவனம் ஒன்றை அவர் நடத்தி வந்ததாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

துப்பாக்கி வழங்கியவரும் சிக்கினார்

கடந்த வருடம் மட்டக்களப்பில் இருந்து ரி56 ரக துப்பாக்கிகள் 80ஐ மதுஷ் அணிக்கு வழங்கிய புள்ளி ஒருவரும் இதில் சிக்கியுள்ளதாக தகவல்.

இதேவேளை இந்த அணியில் ராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த நபர் குறித்த தகவலை, பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக வெளியிடாதிருக்கும் இலங்கை பொலிஸார், விரைவில் அதனை அறிவிப்பார்களென சொல்லப்படுகிறது.

தொடர்பான செய்தி: மதுஷ் சிக்கியது எப்படி; உள்ளுக்குள் புகுந்த உளவாளிகள்: ஜனாதிபதியின் உத்தரவில், லத்தீப் வகுத்த ரகசியத் திட்டம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்