மாக்கந்துர மதுஷ் கைது செய்யப்பட்ட போது, இலங்கையின் அரசியல்வாதி ஒருவரும் சிக்கினார்
துபாயில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் என்பவர் பிரபல போதைப் பொருள் கடத்தர்காரர் என்பதோடு, பல கொலைகளுடனும் தொடர்புபட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மாக்கந்துர மதுஷின் இரண்டாவது மனைவியின் முதல் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றபோது, அதில் கலந்து கொண்ட மதுஷ் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மூவர் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட பாதாள உலகத் தலைவர்கள் எனவும் அறிய முடிகிறது.
துபாய் பொலிஸார் இவர்களைக் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இலங்கைப் பாடகர் அமல் பெரேரா, அவரின் மகன் நதிமல் பெரேரா, நடிகர் ராயன் ஆகியோரும், இலங்கையின் பிராந்திய அரசியல்வாதி ஒருவரும் அடங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் கைது செய்யப்பட்ட இடத்தில் 20 கிராம் அளவு கொகொய்ன் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவர்களை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.