ஓய்வு பெற்றார் லத்தீப்: பிந்திய சேவை நீடிப்பையும் நிராகரித்தார்
தனது சேவைக் காலத்தின் இறுதி நாளான பெப்ரவரி 01ஆம் திகதிக்குப் பின்னர், தனக்கு வழங்கப்படும் சேவை நீடிப்பை ஏற்கப் போவதில்லை என்று, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் – பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.
போதைப் பொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மிகவும் கடுமையாகச் செயற்பட்டவராக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப், அதிகம் அறியப்படுகிறார்.
இந்த நிலையில், அவரின் சேவைக்காலம் கடந்த 01ஆம் திகதியுடன் நிறைவடைந்த போதும், அதுவரை அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை.
ஆயினும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீபுக்கு சேவை நீடிப்பை வழங்குவதற்குப் பதிலாக, ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றுவதற்கான சந்தர்ப்பமொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியதாகவும், ஆயினும் அதனை நாகரீகமாக லத்தீப் நிராகரித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீபுக்கு, சேவை நீடிப்பை வழங்க, நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி உத்தேசித்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆயினும், பெப்ரவரி முதலாம் திகதிக்கு பின்னர் தனக்கு வழங்கப்படும் சேவை நீடிப்பை, ஏற்கப் போவதில்லை என்று, ஏற்கனவே பொலிஸ் திணைக்களத்துக்கு லத்தீப் அறிவித்துள்ளார்.
அந்தவகையில், பெப்ரவரி 01ஆம் திகதியிலிருந்து, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப் – தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.