தூபியில் ஏறிய தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படங்கள் எடுத்தமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 08 பேருக்கும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேற்படி மாணவர்கள் இன்று செவ்வாய்கிழமை கெப்பிட்டிகொல்லாவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்கள் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் வெவ்வேறாக அபராதம் விதித்து, நீதிவான் எச்.கே.மாலிந்த ஹர்சன டி அல்விஸ் தீர்ப்பளித்தார்.
மதங்களுக்கு இடையில் குளறுபடிகளை ஏற்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் ஒன்றுசேர்ந்தமை மற்றும் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.
அதற்கமைய முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுகளுக்கு அரச செலவாக தலா 1,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் மூன்றாவது குற்றச்சாட்டுக்கு தலா 50,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் இதன்போது நீதிவான் உத்தரவிட்டார்.
தொடர்பான செய்தி: தூபியில் ஏறி படம் எடுத்த தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்க மறியல்