அழகய்யாவின் கடையை அலங்கரிக்கும், இந்தியத் தலைவர்கள்

🕔 February 3, 2019

காந்தி, அண்ணா, காமராஜர், அப்துல் கலாம், பெரியார், சுபாஷ் சந்திரபோஸ், கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் அம்பேத்கர் என்று, ஏராளமான இந்திய தலைவர்களின் படங்கள், சுவர்களில் சுற்றி வரத் தொங்க விடப்பட்டுள்ள சிறிய கடையொன்றில், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அழகய்யாவுக்கு 71 வயதாகிறது.

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த அழகய்யா – ஒரு சலவைத் தொழிலாளி. அருகிலுள்ள அக்கரைப்பறில்தான் அவரின் கடை அமைந்துள்ளது. கடையின் சுவர் முழுக்க இந்தியத் தலைவர்களின் பிரேம் செய்யப்பட்ட படங்களாகவே உள்ளன. விவேகானந்தர் தவிர, அத்தனை பேரும் அரசியல் தலைவர்கள்.

“வட நாட்டுத் தலைவர்கள், தமிழ்நாட்டு தலைவர்கள் என்கிற பேதங்களின்றி, இவர்கள் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும்” என்கிறார் அழகய்யா.

1963இல் தனது தாத்தாவிடம் (அம்மாவின் அப்பா) தொழில் கற்றுக் கொண்டவர், 1970ம் ஆண்டு தொடக்கம் தனியாக தொழில் செய்து வருகின்றார்.

தொழில் தொடங்கியதிலிருந்து இப்போது வரை, முஸ்லிம்கள் வாழும் அக்கரைப்பற்று பிரதேசத்தில்தான் அழகய்யாவின் கடை இருந்து வருகிறது. அவரின் வாடிக்கையாளர்கள் முஸ்லிம்களாகவே இருக்கின்றனர். சில சமயம் அழகய்யாவும் அவரின் வாடிக்கையாளர்களும் உறவு முறை சொல்லியே தங்களுக்குள் அழைத்துக் கொள்கின்றார்கள். அழகய்யாவுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள உறவு, அத்தனை நெருக்கமானது.

அழகய்யாவின் கடைச் சுவர்களிலுள்ள படங்களில் சுபாஷ் சந்திரபோஸின் படம், கடுமையாக சேதமடைந்து போயுள்ளது. ஜெயலலிதாவின் உருவப்படம்தான் இருப்பவற்றில் புதிதாகத் தெரிகிறது.

இந்தப் பிராந்தியத்தில் சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த, முடி திருத்தும் கடைகளில்தான் இப்படி இந்திய அரசியல் தலைவர்களின் உருவப்படங்கள் காணப்பட்டன. ஆனால், இப்போதுள்ள இளம் தலைமுறையினரின் முடிதிருத்தும் கடைகளில் இவ்வாறான படங்கள் இல்லை.

ஆனால், அழகய்யாவின் கடையில் இருப்பவை போன்று, அதிக எண்ணிக்கையிலான இந்தியத் தலைவர்களின் படங்களைக் கொண்ட கடையொன்றினை, இதற்கு முன்னர் இந்தப் பகுதியில் தான் கண்டதில்லை என்கிறார், அழகய்யாவின் வாடிக்கையாளர் ஒருவர்.

தனது கடைச் சுவரில் “வாழும்” இந்தியத் தலைவர்களில், அறிஞர் அண்ணாவைத்தான் (சி.என். அண்ணாத்துரை) தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் அழகய்யா. அடுத்து யாரைப் பிடிக்கும் என்று கேட்டதற்கு; “கொள்கைக்காக எம்.ஜி.ஆர். அவர்களை பிடிக்கும்” என்றார்.

1969ஆம் ஆண்டு தனது 21வது வயதில் இந்தியாவுக்கு கப்பலில் சென்றதாக அழகய்யா கூறுகிறார். “இந்தப் பகுதியில் அப்போது சாக்கு (கோணி) விற்கும் கடையொன்றினை திருச்சியை சேர்ந்த இந்தியர் ஒருவர் நடத்தி வந்தார். அவருடன்தான் இந்தியா சென்று 15 நாட்கள் தங்கினேன்” என்று, கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார்.

இந்திய அரசியல் பற்றியும், இந்தியத் தலைவர்கள் பற்றியும் நிறையவே அழகய்யா தெரிந்து வைத்திருக்கிறார்.

கடவுள் படங்களாலும், இந்தியத் தலைவர்கள் படங்களாலும் நிறைந்திருக்கும் அழகய்யாவின் கடையில், இலங்கையர்களின் உருவப்படங்கள் எவையுமில்லை.

நன்றி: பிபிசி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்