பாலமுனையில் நடைபெற்ற கல்வி எழுச்சி மாநாடும், கௌரவிப்பு நிகழ்வும்

– பி. முஹாஜிரீன் –
பாலமுனை அல் – அறபா விளையாட்டுக் கழகத்தின் எற்பாட்டில் கல்வி எழுச்சி மாநாடும் கௌரவிப்பு விழாவும் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
அல் அறபா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ். ஆப்தீன் தலைமையில் பாலமுனை கடற்கரை திறந்த வெளியரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாலமுனையைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.ஐ.எம். மௌஜூத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
பாலமுனைக் கிராமத்திலிருந்து 2008 முதல் 2013 வரை பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகி, பட்டம் பெற்றவர்களும் மற்றும் தற்போதும் கற்கை நெறியினைத் தொடர்ந்து வருகின்றவர்களுமாக 43 பேரும் அவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
இவ் விழாவில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானோர் அனைவரும் பதக்கங்கள் அணிவித்து பாராட்டப்பட்டனர். பின்னர் அவர்களது பெற்றோர் மேடையேற்றப்பட்டு அவர்கள் முன்னிலையில் அதிதிகளால் நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பாலமுனையிலிருந்து முதல் தடவையாக மருத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட எஸ்.எம். றிபாஸ்தீன், பொறியில் பீடத்திற்குத் தெரிவான எம்.எச். நௌஸாத், மருத்துவ பீடத்திற்கு மாவட்டத்தில் முதல்தர சித்திபெற்று தெரிவான ஏ.எல். சுதைஸ் முகம்மட், கல்வி நிருவாக சேவைக்குத் தெரிவு செய்யப்பட்ட ஏ.ஜி. பஸ்மில், முதல் இஸ்லாமிய பல்கலைக்கழக பட்டதாரியான ஐ.எல்.எம். ஹாஸிம் சூரி மதனி, முதல் சட்டத்தரணி ஐ.எல். இஸ்மாலெவ்வை ஆகியோர் இங்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்கள் வழங்கி விசேட கௌரவமளிக்கப்பட்டனர்.
இதேவேளை, இவர்கள் பொது அமைப்புகளாலும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பாலமுனையிலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய ‘செழுமை’ எனும் தகவல் திரட்டு விசேட மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் பேராசிரியர் எம்.ஐ.எம். மௌஜூத், வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காஸிம், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கே. கார்த்தீபன் ஆகியோர் பொன்னாடைபோர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.

