தேசிய சுதந்திர தின நிகழ்வுக்கு அழைப்பில்லை்; பொன்சேகா தெரிவிப்பு: பின்னணியில் யார்?
தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வு பெப்ரவரி 04ம் திகதி, ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.
இருந்தபோதும், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் “நாட்டின் மிக உயர்ந்த ராணுவ அதிகாரி எனும் வகையில், எனக்கு வழங்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்றால், நான் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டேன்” என்று, சரத் பொன்சேகா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய சுதந்திர தினத்துக்கு அழைக்கும் பொறுப்பு ஐ.தே.கட்சியின் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் கீழ்வரும் – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு உரியது என்று, அரசாங்க தரப்புக்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இது இவ்வாறிருக்க சரத் பொன்சேகாவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நல்லுறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த அரசியல் குழப்பத்தின் போது, ஜனாதிபதியை மிக மோசமாக சரத் பொன்சேகா விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து, அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு, ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவித்திருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.