காடுகளின் மூதாதை: ஒரு யானையை பாதுகாப்பது, 18 லட்சம் மரங்களை விதைப்பதற்கு சமம்

🕔 February 1, 2019

“ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்க? மிஞ்சிப்போனா ஒரு 05 கிலோ? எவ்ளோ தண்ணி குடிப்பீங்க? ரொம்ப அதிகமா ஒரு 08 லிட்டர்? நீங்க சாப்பிடுறதுனால, உங்களைத் தவிர வேற யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கா?”

“ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும். ஒரு யானை, ஒரு நாளைக்கு 200 – 250 கிலோ உணவு சாப்பிடும். சராசரியா அதனோட உடல் எடையில இருந்து 5 சதவிகித உணவை சாப்பிடும். ஒரு நாளைக்கு ஒரு யானை 100 – 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

இந்த 250 கிலோ உணவுங்கிறதுல, 10 சதவிகிதம் விதைகள் இருக்கும். அதாவது 25 கிலோ விதைகள், குச்சிகள் இருக்கும். அதுல கடைசிக்கும் கடைசியா 10 கிலோ விதைகளும் குச்சிகளும் திரும்ப மண்ணுல விதைக்கப்படும். நினச்சுப் பாருங்க, ஒவ்வொரு யானையும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 கிலோ விதைகளை விதைக்குது. எண்ணிக்கையில சொல்லணும்னா, சராசரியா ஒரு யானை ஒரு நாளைக்கு 300 – 500 விதைகளை விதைக்குது”.

500 விதைகளில் குறைந்தது 100 விதைகளாவது முளைத்துவிடும். இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான். அப்படியென்றால், ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. வருடத்திற்கு 36 ஆயிரத்து ஐநூறு மரங்கள். மொத்தமாகப் பார்த்தால் ஒரே ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளரக் காரணமாகிறது. இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான்.

இன்னும் ஆச்சரியங்கள் உள்ளன.

“இப்போ இவ்வளவு சாப்பிடணும்னா அது எவ்வளவு பயணம் செய்யணும்? இப்பல்லாம் நம்மளால இந்த இத்துனூண்டு உடம்ப தூக்கிட்டு 10 கிலோமீட்டர்கூட சேந்தாப்புல நடக்க முடியல. ஆனா ஒரு யானையால ஒரு நாளைக்கு 190 கிலோமீட்டர் நடக்க முடியும்னு ஆய்வுகள் சொல்லுது. சராசரியா ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டர் தூரம் யானைகள் நடக்கும். அதுவும் 4-5 மணி நேரத்துல”.

அப்படியென்றால் சராசரியாக மணிக்கு 15 லிருந்து 20 கிலோமீட்டர் வேகம். யானைகள் மிக வேகமாக ஓடும். யானைகள் துரத்தினால் மனிதர்களால் ஓடித் தப்பிக்க முடியாது. மனிதர்களைவிட 2 மடங்கு வேகத்தில் யானைகள் ஓடும்.

ஏன் 4-5 மணிநேரம் மட்டுமே நடக்கின்றன? மற்ற நேரங்களில் என்ன செய்யும்?

“சாப்புடும்”.

அவ்வளவு நேரமுமா?

“ஒரு நாளைக்கு 12 – 18 மணி நேரம் சாப்பிட்டுகிட்டே இருக்கும்”.

அப்போ தூக்கம்?

“யானைகள் இரண்டு மணிநேரம் மட்டுமே தூங்கும்”.

“இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் இருக்கு. எந்த பாலூட்டிகளைவிடவும் அதிகமான பேறு காலம் கொண்டவை யானைகள்தான். 22 மாசம்”.

காடுகளின் மூதாய் யானைகள்தான். பழங்காலத்திற்கும் இன்றைய நவீன உலகுக்கும் உள்ள ஆதி உயிர்த் தொடர்புச் சங்கிலியின் எச்சம் இந்த யானைகள்தான்.

மரங்களை நடுவதைவிட, சுற்றி இருக்கும் உயிர்களை பாதுகாப்போம். அவ்வுயிர்களைவிட நேர்த்தியாகவும் எளிமையாகவும் நம்மால் எதுவும் செய்துவிடமுடியாது.

தொடர்பான கட்டுரை: இலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்