ஜுன் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்: ஜனாதிபதியின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம்
மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் ஜுன் மாதத்துக்கு முன்னர் நடத்த வேண்டுமெனக் கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டு வந்த பத்திரத்தை, அமைச்சரவை அங்கிரித்துள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.
ஜனாதிபதி கொண்டு வந்த மேற்படி பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரித்ததோடு, தேர்தலை நடத்துவதற்கு தாம் எதிர்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிதான் தேர்தல் தாமதமடைவதற்குப் பொறுப்பாகும் என்றும், ஐ.தே.கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
நொவம்பர் 09ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தவறினால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து – தான் ராஜிநாமா செய்யப் போவதாக, மஹிந்த தேசப்பிரிய அறிவித்து மறுநாளுக்கு அடுத்த நாள், இந்த அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான பிரேரணை ஒன்றினை நாடாளுமன்றம் நிறைவேற்ற வேண்டியுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு – ஐ.தே.கட்சி தயக்கம் காட்டி வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.