கட்டாக்காலி மாடுகளை பிடிக்க தீர்மானம்; தண்டம் 03 ஆயிரம் ரூபாய்: அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் தெரிவிப்பு
– முன்ஸிப் அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட எல்லையில், வீதிகளில் கட்டாக்காலிகளாக அலையும் மாடுகளைப் பிடித்து அடைப்பதற்கும், அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களிடம், மாடு ஒன்றுக்கு 03ஆயிரம் ரூபா வீதம் – தண்டம் அறவிடுவதற்கும், பிரதேச சபை தீர்மானித்துள்ளதாக, சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.
வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதனாலும், சுகாதார சீர்கேடுகள் உருவாகின்றமையினாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாகவே, மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டாக்காலி மாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பிரதேச சபையிடம் தொடர்ச்சியாக விடுத்து வந்த கோரிக்கைக்கு அமைவாகவே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீதிகளில் கட்டாக்காலிகளாக நடமாடும் போது பிடிக்கப்படும் மாடுகளை, அவற்றின் உரிமையாளர்கள் ஒரு நாளுக்குள் தண்டப்பணத்தைச் செலுத்தி விடுவித்துச் செல்ல வேண்டுமென்றும், தவறும் பட்சத்தில் – மறுநாள் நீதிமன்றில் மாடுகள் ஒப்படைக்கப்படும் என்றும், செயலாளர் பாயிஸ் மேலும் தெரிவித்தார்.