பைசல் காசிம், நசீருக்கு இடையில் குத்து – வெட்டு: ‘உரிமை’க் கட்சிக்குள் ‘குடுமி’ச் சண்டை

🕔 January 29, 2019

– அஹமட் –

ம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சுகாதார ராஜாங்க அமைச்சருமான பைசல் காசிம் மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் ஆகியோருக்கு இடையில் பகைமையும், குத்து – வெட்டுகளும் உச்சமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

மேற்படி இருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

இந்த மோதல்கள் காதரணமாக சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்டத்தில் பைசல் காசிம் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்வுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அழைக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.

இதனால் நசீருக்கு நெருக்கமான தொண்டர்கள், பைசல் காசிமுக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக நிந்தவூரில் நடைபெற்ற வைத்தியசாலை திறப்பு விழா, பொத்துவில் வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வழங்கும் நிகழ்வு போன்றவற்றுக்கு நசீர் அழைக்கப்படவில்லை என்பதும், இந்த நிகழ்வுகளில் பைசல் காசிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி இருவருக்கும் இடையிலான மோதல், 2015ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வருகின்றது.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக இருந்த 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில், அப்போது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த பைசல் காசிமுடன் முரண்பட ஆரம்பித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பைசல் காசிம் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, அதற்கு நசீர் தடையேற்படுத்தியதாகவும், அதனால் இவர்கள் இருவருக்குமிடையில் முரண்பாடு ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.

அந்தப் பகைமை இப்போது உச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மு.காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் சிலரை, ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தனது பிரத்தியேக அலுவலர்களாக நியமித்திருப்பதும், நாடாளுமன்ற உறுப்பினர் நசீருக்கு பைசல் காசிம் மீது, மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்