இறக்காமம் காதி நீதவான், தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்: நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு

🕔 January 26, 2019

– றிசாத் ஏ காதர் –

றக்காமம் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வரிப்பத்தான்சசேனை மஜீட்புரம், வாங்காமம் 10, 11ம் பிரிவுகள் மற்றும் நல்ல தண்ணிமலை, குடுவில் ஆகிய கிராமங்களை மையப்படுத்தியதாக நியமிக்கப்பட்ட குவாசி நீதவான் முறைகேடாக நடந்துகொள்வதாக, நீதிச்சேவை ஆணைக்குழுவின் காதிப்பிரிவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள்எழுத்துமூலம் அறிவித்துள்ளனர்.

குறித்த காதி நீதவான் மீது அக்கடிததத்தில் பத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் விவகரத்துப் பெற்றுள்ளார். அத்தந்தை அப்பிள்ளைகளின் மாதாந்த செலவீனங்களுக்கு 54ஆயிரம் ரூபாவினை செலுத்தவேண்டும் என குவாசி நீதவான் கோரியுள்ளதாகவும், அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையுடன் கணவர் ஒருவர் விவாவகரத்து பெற்றால் அப்பிள்ளையின் செலவுக்காக மாதாந்தம் இருபதுநாயிரம் அல்லது பதினெட்டாயிரம் செலுத்த பணிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அக்கடிதத்தில்; குறித்த காதி நீதவான் கடந்த பத்து மாதங்களாக முறைப்பாடொன்றை ஏற்றுக்கொள்ளாமல் முறைப்பாட்டாளரை அலைக்கழிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தாபரிப்புச் செலவு, பிள்ளைச் செலவுகளை தீர்மானிக்கின்ற போது உரிய தரப்புகளுக்கு அறிவிப்புச் செய்வதில்லை என்றும் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது.

மேலும், வழக்குகளை விசாரித்த பின்னர் தீர்ப்பினை உரியவர்களுக்கு தெரியப்படுத்தாது தபாலில் அனுப்புவதாக கூறிவதுடன், அவ்வாறு இதுவரை எந்தத் தீர்ப்பினையும் தபாலில் அனுப்பவில்லை என்றும் குவாசி நீதவானுக்கு எதிரான கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் விவாகரத்துப் பெற்றவர்கள் மறுமணம் முடிக்க தேவையான ஆவணங்களை வழங்க மறுப்பதுடன், வருடக்கணக்கில் இழுத்தடிப்புச் செய்யப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கையில் சனிக்கிழமைகளிலேயே குவாசி நீதிமன்றுகள் இயங்குகின்றன. ஆனால் இறக்காமத்தில் மாத்திரம் வேலை நாளான வியாழக்கிழமை நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் லிகிதர் கடமைக்கென நீதிச்சேவை ஆணைக்குழுவினால் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுகின்றபோதிலும் அப்படி ஒருவர் இதுவரை நியமிப்புச் செய்யப்படாமல் பல ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக பொறுப்பற்ற முறையில் குவாசி நீதவான் பதிலளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தகாத வார்த்தைப்பிரயோகங்களைக் கொண்டு முறைப்பாட்டாளர்களை நோவினை செய்வதாகவும், அம்முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்துக்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கும் முறைப்பாட்டாளர்கள், குறித்த காதி நீதவான் தொடர்ந்து பணிக்கமர்த்தப்பட்டால் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்பிரதேசத்துக்கு புதிய காதி நீதாவான் பதவிற்கு தற்போது விண்ணப்பம் கோரரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்