வாக்கு தவறினார் ஹரீஸ்; ஞாபகப்படுத்தி, சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் கடிதம்

🕔 January 23, 2019

– றிசாத் ஏ காதர் –

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபைக் கோரிக்கை தொடர்பில் அம்மக்களுடன் திறந்த கலந்துரையாடல் ஒன்றினை நடத்துவதற்கு தான் தயாராகவுள்ளதாக தெரிவித்த உள்ளூராட்சி மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்,  தற்போது  அவ்விடயத்தை இழுத்தடிப்புச் செய்து வருதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 23ஆம் திகதி, கல்முனையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ராஜாங்க அமைச்சர், மேற்படி  கலந்துரையாடலுக்குத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

குறித்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட சாய்ந்தமருது – மாளிக்கைக்காடு பள்ளிவாசல்கள் நிறுவனத்தினரும் கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருதுக்கான  சுயேட்சைக் குழு உறுப்பினர்களும்,  மேற்படி சந்திப்புக்கான சம்மதத்தினை ராஜாங்க அமைச்சருக்கு தெரிவித்திருந்தனர்.

அதற்கிணங்க, அந்த சந்திப்பை இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதாக தெரிவித்த ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கூறியிருந்தார்.

ஆயினும், இதுவிடயமாக இதுவரையில் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமையினால், ராஜாங்க அமைச்சருக்கு  கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருதுக்கான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள், கடந்த 16ஆம் திகதியிட்டு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடித்தத்தில்; ‘தங்களின் பகிரங்க அறிவிப்பை ஏற்றுக்கொண்டு சந்திப்புக்கான விருப்பத்தை தெரிவித்திருந்தோம்.  மேலும் அம்பாறை மாவட்டத்துக்கு வெளியே ஓர் இடத்தில் இச்சந்திப்பை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்யுமாறும் தங்களது பிரதிநிதிகளிடம் கூறியிருந்தோம். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட இரண்டு வாரங்கள் கழிந்தும், சந்திப்புக்கான திகதி வழங்கப்படவில்லை’  என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் நடைபெறும் என வாக்குறுதி வழங்கிய அச்சந்திப்பில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாசல் நிருவாகசபையினர், கல்முனை மாநகர சபையின்சாய்ந்தமருது சுயேட்சுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ளவார்கள் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்புக்கான காலம் இரண்டு வாரம் கடந்தும் எந்த முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்பதுடன், அதற்கான ஏற்பாடுகளை விரைவாக மேற்கொள்ளுமாறும், ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸூக்கு அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்