சந்தைக்கு அரிசியை நேரடியாக விநியோகம் செய்யும் பொருட்டு, கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை

🕔 January 22, 2019

நுகர்வோருக்கு அரிசியை விற்பனை செய்து வந்த கூட்டுறவுச் சங்கங்களின்  தொழிற்பாடு மேலும் விஸ்தரிக்கப்பட்டு, சந்தையில் அரிசியை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பில் சிறிய அரிசி ஆலை  உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது  சில முன்னேற்றகரமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன .

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை  சிறிய அரிசி ஆலை  உரிமையாளர்கள் சந்தித்து தமது தொழில் தொடர்பில் எதிர் நோக்கும் கஷ்டங்களை எடுத்துரைத்த போதே, துறைசார் அமைச்சர் என்ற வகையில் இவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், உதவவும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார் .

சிறிய அரிசி ஆலை  உரிமையாளர்களின்  விமோசனத்தை கருத்திற்கொண்டு நாட்டின் ஐந்து மாகாணங்களிலுள்ள எட்டு கூட்டுறவுச்சங்கங்களில் அங்கம் வகிக்கும் வகையில் சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டுறவுத்துறையுடன் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

அது மாத்திரமின்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட கூட்டுறவுச் சம்மேளனத்துடனும், இந்த சிறிய ஆலை உரிமையாளர்கள் இணைக்கப்பட்டிருந்த போதிலும் தாங்கள் கடன்களைப் பெறுவதில் பல்வேறு தடைகள் இருந்து வந்ததை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அத்துடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சி, இயற்கை அனர்த்தம் ஆகியவற்றின் காரணமாக நாட்டின் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டதனால் தமது ஆலைத் தொழிலும் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளதையும் அவர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அத்துடன் கடந்த காலங்களில் தாங்கள்  பெற்ற கடன்களை உடனடியாக வங்கிகளுக்கு மீளச் செலுத்த முடியாதிருந்ததாகவும், எனவே புதிதாக கடன்களை வழங்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே தமது தொழிலை மீண்டும் லாபகரமானதாக்கி கடன் சுமைகளையும் தீர்க்கமுடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, கூட்டுறவுச் சம்மேளனத்துடன் உள்வாங்கப்பட்ட ஆலை உரிமையாளர்களை உள்வாங்கி அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்