கண்களில் கரிக்கும் அபாயா
– எப்.எச்.ஏ. அம்ஜாட் –
பாடசாலை ஏடு தொடங்கும் வேளையில் கற்பிக்கப்படும் முதலாவது விடயம் அடிப்படைத் தேவைகள் பற்றியதாகும். உணவு, உடை, உறையுள் என்பன அடிப்படைத் தேவைகள் என கல்வியின் ஆரம்பமே எமக்குக் கற்றுத் தந்து விடுகிறது. ஆக, இவை மூன்றும் இன்றேல் வாழ்க்கை கடினமாகி விடும்.
ஷண்முகா வித்தியாலயத்தின் ‘அபாயா’ சர்ச்சை அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான ‘ஆடை’ பற்றியதாகும்.
ஆடை இன்றிப் பிறக்கும் மனிதன் காலப் போக்கில் தனது தெரிவின் அடிப்படையில் ஆடைகளைத் தேர்வு செய்கிறான். ஆடை என்பது ஒரு மனிதனின் சுதந்திரதிற்குட்பட்ட விடயமாக மாறி விடுகிறது. தனது விருப்பு, கலாச்சாரம், இனம், மார்க்கம் என தனது ஆடை – தன்னைப் பிரதிநிதித்துவம் செய்யும் பல்வேறு காரணிகளைக் கொண்டு செதுக்கப்படுவதை மனிதனும் சமூகமும் ஆராதிக்கின்றன. ஆக, ஆடை அடிப்படைத் தேவை என்பதோடு மாத்திரமல்லாமல், எம்மை அடையாளப்படுத்தும் பிரதான வெளிப்பாடாகவும் காணப்படுகிறது.
அலுவலக வாழ்க்கையில் ஆண்கள் ‘ஷேர்ட்’ மற்றும் ‘ட்ரௌசர்’ போன்ற மேற்கத்திய ஆடைகளுடன் தம்மை மட்டுப் படுத்தியுள்ளனர். சிங்கள மற்றும் தமிழ் அலுவலர்கள் பெரும்பாலும் புடவை அணிகின்றனர். முஸ்லிம் பெண் அலுவலர்கள் தமது மார்க்கத்தில் மறைக்கப்பட வேண்டிய பகுதிகளை மறைக்கும் வண்ணம் பல்வேறு தெரிவுகளில் ஆடை அணிகின்றனர். இதில் ‘அபாயா’ ஒரு வகையாகும்.
சிங்கள மற்றும் முஸ்லிம் அலுவகர்கள் அதிகம் பணி புரியும் அலுவலகங்களில் அவர்கள் ஏனைய சகோதரர்களுக்கு ஆடை விடயத்தில் தொந்தரவு கொடுப்பதில்லை; கொடுக்கவும் முடியாது. ஏனெனில், எமது நாட்டின் Supreme Law (உயரிய சட்டம்) ஆன அரசியலமைப்புச் சட்டம் தனது அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் 10 ஆம் உறுப்புரையில் மத சுதந்திரத்தையும் அதனை மேற்கொள்வதற்கான சுதந்திரத்தையும் வழங்குகின்றது.
ஆக, தனது மார்க்கத்தில் குறிப்பிட்ட வரையறைக்குள் எந்த ஆடையையும் அணிவது அடிப்படை உரிமையாகும். இதனைத் தடுத்தால், உறுப்புரை 17 மற்றும் உறுப்புரை 126 இன் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம். ஆகவே, இந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் Supreme Court யில் நிவாரணம் பெற முடியும்.
இதில் கவலைக்குரிய விடயம் யாதெனில், சில முஸ்லிம் சகோதரர்கள் இதில் மூக்கை நுழைத்து ‘அபாயா’ தொடர்பில் அதிருப்தி வெளியிடுவதாகும். ஆடை என்பது அடிப்படைத் தேவையாக இருக்கும் போது, அது அபாயாவாக, ஷல்வாராக, புடவையாக அல்லது எதுவாக இருப்பினும் பிரச்சினை இல்லை எனக் கூறாமல் அபாயாவை விமர்சிப்பது மிகவும் வேதனையானதாகும்.
கொழும்பு நகர்ப் புறங்களில் அரை குறை ஆடைகளுடன் பெண்கள் திரிவதனை விமர்சிக்காத சமூகம், தன்னை முழுமையாக மறைக்கும் ஆடையை விமர்சிப்பது பத்தாம் பசலித் தனமாகும். தமிழர் சமூகத்திலுள்ளவர்களும் கூட ‘அபாயா’ விடயத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளும் போது, முஸ்லிம் சகோதரர்களில் பல மேதாவிகள் ‘அபாயா’ என்பதனை சர்ச்சையுடன் நோக்குவது மிகவும் கேவலமான நிலையாகும்.
கல்வி அமைச்சின் 2018.05.23 ஆம் திகதிய ED/01/21/03/1(4) ஆம் இலக்க சுற்று நிருபமானது ‘கர்ப்ப காலத்திற்கு பொருத்தமான ஆடை’ எனும் விடயப் பொருளில் கர்ப்பவதி ஆசிரியைகளுக்குரிய ஆடை சுதந்திரத்தை வழங்குகின்றது. ஆக, ஆடை என்பது ஒரு சமூகத்தை இனவாதத்துடன் நோக்கும் ஒரு பொருளல்ல. மாறாக, ஏனைய சகோதரர்களை மதிக்கக் கற்றுத் தரும் ஓர் உளப்பூர்வமான விடயமாகும்.
தமது மார்க்க விழுமியங்களைப் பேணும் வகையில் எந்த ஓர் ஆடையையும் அணிவது ஒரு மனிதனின் அடைப்படை உரிமையாகும். இதில் அபாயா, புடவை என்ற சித்தாந்தம் கிடையாது. மாறாக, ஒரு மனிதனின் சுதந்திரம், தெரிவு என்பன மாத்திரமே செல்வாக்குச் செலுத்தும்.
அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) யின் மூலம் ‘சட்டத்தின் முன் ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள்’ என்பது எமக்குள்ள அடிப்படை உரிமையாகும்.
“மனிதம் போற்றி – மனிதம் காப்போம்”