மற்றொரு குற்றச்சாட்டு; ஹபாயா அணியும் ஆசிரியைகள் ‘பேய்’கள்; மன்ஸுர் வாக்கு மூலம்: ஆதாரம் அம்பலம்
– முன்ஸிப் அஹமட் –
“கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி பின்தங்கியதற்கு, ஹபாயாவும் ஒரு காரணம்” என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்ஸுர் கூறியதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். ராஸி முகம்மத் எழுதிய அந்தச் செய்தியில்; பெண் ஆசியர்கள் ஹபாயா அணிந்து வருகின்றமையை, மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில், மாகாணக் கல்விப் பணிப்பாளர், கீழ்நிலைப்படுத்தி பேசியிருந்ததாகவும் ராஸி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பேஸ்புக் நேர்காணல் ஒன்றில் பங்குபற்றியிருந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்ஸுர்; ஹபாயா குறித்து தான் இவ்வாறெல்லாம் கூறவில்லை என்றும், இவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் எனவும் கூறியிருந்தார்.
இதனையடுத்து, மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் மன்ஸுர் வழங்கியிருந்த வாக்கு மூலத்தினுடைய எழுத்து வடிவின் ஒரு பகுதி எனத் தெரிவிக்கப்படும், ஆவணமொன்றினை பேஸ்புக்கில் ராஸி முகம்மத் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆவணத்தை ‘மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டறிக்கை’ என, ராஸி குறிப்பிட்டுள்ளார்.
அதில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் மன்ஸுர்; “பெண் ஆசிரியர்கள் கறுப்பு ஹபாயா அணிந்து வரும் போது, அவர்களை பிள்ளைகள் பேய் என உணர்கின்றனர்” எனக் கூறி, முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியுள்ளமை அம்பலமாகி உள்ளது.
- கிழக்கின் கல்வி வளர்ச்சி, பின்தங்கியமைக்கு பெண்கள் அணியும் ஹபாயாவும் ஒரு காரணம்.
- ‘மும்பாய்’ திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா கறுத்த ஆடையை அணிந்து கொண்டு அப்படியும் இப்படியும் கையை ஆட்டிக் கொண்டு வருவது போல், இந்த ஆசிரியைகளும் வரும் போது மாணவர்கள் பயப்படுகிறார்கள்.
- “எனக்கு இந்த ஆசிரியைகளை மேலதிக ஆசிரியைகள் என்று காட்டி, வேறு பாடசாலைகளுக்கு அனுப்புவது பெரிய வேலை அல்ல” .
- ‘’போங்கள். ஷண்முகாக்குப் போய் மீண்டும் பட்டுக்கொண்டு வாருங்கள்’’ என்று பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண் ஆசிரியர்களிடம் கூறியமை.
என, மன்ஸுர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் இப்போது, ஹபாயா அணியும் ஆசியைகளைப் பேய் எனக் கூறியதாகவும் ஆவணச் சான்றுடன் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் குறித்து மன்ஸுர் என்ன சொல்லப் போகிறார் என்பதுதான் அடுத்த கேள்வி.
தொடர்பான செய்தி: ஹபாயா அணிந்து, ஆட்டிக் கொண்டு வரும் ஆசிரியைகளைப் பார்த்து மாணவர்கள் பயப்படுகின்றனர்: மன்ஸுரின் கருத்தால், முஸ்லிம்கள் ஆத்திரம்