ஜனாதிபதி தேர்தலில் நானும் போட்டியிடத் தயார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, தான் தயாராக உள்ளதாக, மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் நேற்று செவ்வாய்கிழமை பேசியபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கு தான் தகுதியானவர் என்றும், அதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், கடந்த சனிக்கிழமையன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ; ‘மக்கள் தயார் என்றால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தானும் தயார்’ என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.