முஸ்லிம் சமூகமும், உணர்ச்சி அரசியலும்

🕔 January 15, 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –

ரசியல் என்பது விஞ்ஞானமாகும். அதனால், அது அறிவுபூர்மாக அணுக வேண்டிய விவகாரமாகவுள்ளது. மறுபுறம், அரசியலை கலை என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அரசியல் வியாபாரமாகும். சிலருக்கு அதுவே முழுநேரத் தொழிலாகவும் இருக்கிறது.

அரசியலை விஞ்ஞானபூர்வமானதொரு விடயமாக விளங்கிக் கொண்டவர்கள், அதை அறிவு ரீதியாக அணுகுவார்கள். அரசியலை உணர்வுபூர்வமான விடயமாக மட்டுமே புரிந்து வைத்திருப்பவர்களுக்கு, அவர்களின் விருப்பத்துக்குரிய கட்சி, “மதம்” போல் இருக்கும்.

அரசியலை முற்றுமுழுதாகவே, உணர்வுபூர்வமாக அணுகும் சமூகம், தனக்கான விடிவைப் பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை. “எனது கட்சியும், தலைவனும் என்ன தவறு செய்தாலும் என்ன துரோகம் செய்தாலும், நான் எதிர்க்க மாட்டேன்” எனும் மனநிலையைக் கொண்டவர்களையுடைய சமூகம், மந்த நிலையைத் தாண்டிச் செல்லப் போவதில்லை.

இலங்கையில், ஒப்பீட்டு ரீதியாக முஸ்லிம்களை விடவும் தமிழர்கள் அரசியலை அறிவு ரீதியாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள். தமிழர்களுக்குள் உருவான ஆயுதப் போராட்டமானது, அரசியலை அறிவுபூர்வமாகப் பார்க்கும் பக்குவத்தைத் தமிழர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது.

ஆனால், அதையும் தாண்டி ஆயுத இயக்கங்களையும் அரசியல் கட்சிகளையும் உணர்வுபூர்வமாக அணுகும் “பக்தவாத” சிந்தனையும் தமிழர்களுக்குள் புகுந்திருக்கின்றது. அதனால்தான், யுத்த காலத்தில் ஆயுத இயக்கங்கள் நடத்திய மனிதப் படுகொலைகளைக் கூட, அந்த சமூகத்திலுள்ள சில படித்தவர்கள் கூட நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

எவ்வாறாயினும், அரசியலை உணர்வுபூர்மாக அணுகும் மனநிலையானது, முஸ்லிம் சமூகத்துக்குள் மிக அதிகளவில் உள்ளது. தேர்தலொன்றில் தாங்கள் ஆதரிக்கும் அரசியல் கட்சி சார்பில் யார் களமிறக்கப்பட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்போர், முஸ்லிம் சமூகத்துக்குள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.

முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து வந்தனர். “எங்கள் உடலை வெட்டினாலும், எங்கள் இரத்தம் பச்சையாகவே ஓடும்” என்று கூறும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் அப்போது அதிகமாக இருந்தனர். முஸ்லிம்களுக்கும் பச்சை நிறத்துக்கும் கலாசார ரீதியிலான தொடர்பொன்று உள்ளது. அந்தத் தொடர்பு – சமய ரீதியான செயற்பாடுகளின் போதும் வெளிப்படுவதுண்டு. முஸ்லிம்களின் சமய மற்றும் கலாசார நிகழ்வுகளில் அலங்காரத்துக்காகக் கட்டப்படும் கொடிகள், பச்சை நிறம் கொண்டவையாக இருப்பதைக் காணலாம். பச்சை நிறம் மீதுள்ள உணர்வுபூர்வமான இந்தப் பிடிப்பினால்தான், பச்சையைக் கட்சிக் கொடியின் நிறமாகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியையும் முஸ்லிம்கள் ஒரு காலத்தில் கணிசமானளவில் ஆதரித்து வந்தனர்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், தற்போது இலங்கையில் புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

இனப் பிரச்சினைக்கான தீர்வாகவும், புதிய அரமைப்பு அமையும் என்று கூறப்படுகிறது. அதிகாரப் பகிர்வை வழங்குவதுதான், புதிய அரசமைப்பின் பிரதான நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நாடாளுமன்றில் எந்தவொரு தரப்பும், தமக்கு ஆதரவாக, மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதென்பது முடியாத காரியமாக இருக்கும் நிலையில், புதிய அரசமைப்பொன்றைக் கொண்டு வந்து, நிறைவேற்ற முடியுமா என்பது கேள்விக்குரியதாகும்.

அதேவேளை, “நாட்டுக்குப் புதிய அரசமைப்பொன்று தேவையில்லை’ என்று, அஸ்கிரிய மகாநாயக பீடத்தைச் சேர்ந்த தேரர் ஒருவர் கூறியுள்ளார். “அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் சட்டத் திருத்தம், இப்போதைக்குப் போதுமானதாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலில், மகாநாயக பீடங்களைப் பகைத்துக் கொண்டு, இலங்கையின் பேரின அரசியல்வாதிகள் எவரும், தமது கால்களை முன்வைப்பார்கள் என்று நம்புவது, நமது புரிதலிலுள்ள கோளாறாகவே அமையும்.

அப்படியென்றால், புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுவதற்கு சாத்தியமில்லை எனும் முடிவுக்கு நாம் வர முடியும் அல்லது புதிதாக உருவாக்கப்படும் அரசமைப்பானது, மகாநாயகப் பீடங்களை அதிருப்திக்குள்ளாக்கும் வகையில் அமையாததாக இருக்கும். இவை இரண்டுக்கும் அப்பால், சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகாரங்களை உச்சபட்சமாகவும் நேர்மையாகவும் பகிரும் வகையில், புதியதோர் அரசமைப்பு உருவாக்கப்படுமானால், அது, அரசியல் அதிசயமாகவே அமையும்.

அப்படியோர் “அதிசயம்” நடக்காது என்று, “அபசகுணமாக” இங்கு நாம் கூறி, யாரின் “சாபங்களை” உம் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை.

இது இவ்வாறிருக்க புதிய அரசமைப்புப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் தொடங்கி விட்டன. புதிய அரசமைப்புக்கான உத்தேச வரைவில், இலங்கை பற்றிய அறிமுகமே தர்க்கத்துக்குள்ளாகியுள்ளது. ‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்று சிங்களத்திலும் ‘ஒருமித்த நாடு’ என்று தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ள சொற்பதங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன.

‘ஒருமித்த நாடு’ என்றால், அது சமஷ்டி அமைப்பைக் கொண்ட நாடு என்று அர்த்தமாகும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகின்றார். இது, சிங்களப் பெரும்பான்மைக்குள் சலசலப்பை ஏற்படுத்தி விட; “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; ஒருமித்த நாடு என்றால், ‘ஒற்றையாட்சி நாடு’ என்றுதான் அர்த்தம்” என, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருக்கிறது. அப்படியென்றால், ஒற்றையாட்சி முறைமையை, தமிழர் தரப்பு ஏற்றுக் கொள்ளுமா எனும் கேள்வி இங்கு எழுகிறது.

இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி, புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுமாயின், அதில், சிறுபான்மை சமூகங்கள் தமக்கான தேவைகளை உள்ளடக்க வேண்டியமை அவசியமாகும். அந்த வகையில், தமிழர் சமூகம் சார்பாக, அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் இதற்காக முழு மூச்சுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமையைக் காண முடிகிறது. குறிப்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அந்தக் கட்சியிலுள்ள சுமந்திரன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான அரசமைப்பொன்றைப் பெற்றுக் கொள்வதில் கடுமையாக உழைக்கின்றனர்.

ஆனால், முஸ்லிம் அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் என்ன செய்கின்றனர் எனத் தெரியவில்லை. முஸ்லிம் அரசியல் தலைவர்கள், வழமைபோல் அரசியல் செய்து கொண்டிருப்பதையே காண முடிகிறது.

வடக்கும் கிழக்கும் இணைந்த மாநிலத்தை, புதிய அரசமைப்பினூடாக, தமிழர்கள் கோருகின்றனர். அதேவேளை, தமிழர்களின் அபிலாசைகளுக்குக் குறிக்கே நிற்கப் போவதில்லை என்று, மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார். அப்படியென்றால், வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்குமா என்று பலரும் கேட்கின்றனர். இதற்குரிய பதிலை, மு.காங்கிரஸ் தலைவர் இன்னும் கூறவில்லை.

மறுபுறம், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் கிடைக்கப் பெறும் போதுதான், அதிகாரப் பரவலாக்கல் அர்த்தமுள்ளதாக அமையும் என்று, மூத்த அரசியல்வாதியும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹசன் அலி கூறியிருக்கின்றார். மறைந்த தலைவர் அஷ்ரப்பின் கோரிக்கையும் அதுவாகவே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அப்படியென்றால், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள்தானே இப்போது பெரும்பான்மையாக இருக்கின்றனர் புதிதாக, முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் எதற்கு” என ஹசன் அலியிடம் கேட்டோம். அதற்கு அவர்; “கிழக்கு என்பது, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற மாகாணமே தவிர, முஸ்லிம்களின் மாகாணமல்ல. கிழக்கு மாகாணத்தில், தனி இனமாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள போதும், அங்குள்ள ஏனைய இனத்தவர்களை மொத்தமாகச் சேர்த்தால், அவர்களின் எண்ணிக்கை முஸ்லிம்களை விடவும் பெரும்பான்மையாக அமைந்து விடும். எனவேதான், ஏனைய சமூகங்களை விடவும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும், நிலத் தொடர்பற்ற ஒரு முஸ்லிம் மாகாணம் வழங்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.

எது எவ்வாறாயினும், தமிழர்கள் தமக்குரிய தாயக நிலமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்துக் கேட்கின்றமை போல், முஸ்லிம்களுக்குரிய நிலமாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இதுவரை எதையும் கோரவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

முஸ்லிம் தலைவர்களின் இந்த அலட்சிய அரசியலுக்கு எதிராக, முஸ்லிம் சமூகத்தினுள்ளிருந்து எத்தனை எதிர்க் குரல்கள் எழும் எனத் தெரியவில்லை.

அரசியலை உணர்வுபூர்மாக அணுகும் ஒரு சமூகத்திலிருந்து, ஒரு திரட்சியான எதிர்ப்பை, அத்தனை இலகுவில் எதிர்பார்க்கவும் முடியாது.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (15 ஜனவரி 2019)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்