தற்போதைய நாடாளுமன்றின் ஆயுள் காலத்துக்குள், பிரச்சினைகளைத் தீர்ப்பது சாத்தியமில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம்

🕔 January 13, 2019
ரசியலில் ஆரம்பத்தில் எமது எதிரியாக இருந்த ஏ.ஆர். மன்சூர், இறுதிக் காலத்தில் எமது கட்சியுடன் இணைந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குபவராக மாறினார். அவருடைய அரசியல் அனுபவங்களும், ஆலோசனைகளும் எமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உரமூட்டுவதாக அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய ‘ஏ.ஆர். மன்சூர் – வாழ்வும் பணிகளும்’ நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய வூப் ஹக்கீம்;

“காலஞ்சென்ற ஏ.ஆர். மன்சூர் – முஸ்லிம் காங்கிரஸின் எதிரியாகத்தான் எனக்கு அறிமுகமானார். காலம் செல்லச்செல்ல அவரின் மானிடப் பண்புகள் பற்றி நானும் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபும் அறிந்துகொண்டோம். அவரது அந்திம காலத்தில் அஷ்ரஃபுடன் மிகுந்த நெருக்கம் கொண்டிருந்தார். அவரை ஒரு அரசியல் ஆலோசகராகத்தான் நாங்கள் பார்த்தோம். அவரது அனுபவங்களின் வாயிலாக ஏராளமான விடயங்களை எங்களுக்கு கற்றுத் தந்தார். 

1970ஆம் ஆண்டு ஐ.தே.க. சார்பாக கல்முனையில் போட்டியிட்ட மன்சூர், சிறிய வாக்கு வித்தியசாத்தில் தோற்றலும், 1977ஆம் ஆண்டு மருதமுனை மக்களின் ஆதரவில் களமிறங்கி பொதுத் தேர்தலில் அபார வெற்றியீட்டினார். அன்று தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை கல்முனை தொகுதியின் நிரந்த அரசியல் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்தினார். அவருடைய காலப்பகுதியில் நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு பாரிய சேவைகளை அவர் செய்துவந்தார்.

வெற்றிகளை வைத்து அரசியல்வாதிகளை எடைபோடுவதில்லை. தோல்விகளை கண்டு துவண்டுபோகாமல், தமது அரசியல் அந்தஸ்தை காப்பாற்றிக்கொண்டு எப்படி வாழ்கிறார்கள் என்பதை வைத்துத்தான் எடைபோடப்படுகின்றனர். அந்தவகையில் மன்சூர் என்ற அரசியல்வாதி மரணிக்கும் வரை, தனது அரசியல் அந்தஸ்தை இழக்கவில்லை. அவர் மக்கள் சேவையை தனது மனதில் சுமந்தவராகத்தான் கடைசி வரைக்கும் இருந்தார் என்பதற்கு நிறைய சாட்சிகள் இருக்கின்றன.

பத்திரிகையில் அவருடைய பிரதேசம் பற்றி ஏதாவது செய்திகள் வந்தால், அதைப்பற்றி தொலைபேசி மூலம் கதைப்பது அவரது நாளாந்த நடவடிக்கையாக இருந்துவந்தது. குவைத் நாட்டுக்கு அவரை தூதுவராக அனுப்பியபோது, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு பாரிய அபிவிருத்திகளை அவர் பெற்றுக்கொடுத்தார். அதேபோன்று கல்முனை பள்ளிவாசல் நிர்மாணத்துக்கு குவைத் நாட்டிலிருந்து பணம் சேர்த்துக்கொடுத்தார்.

ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் முரண்பாடு இருந்தாலும், கடைசியில் தன்னை கட்சியுடன் இணைத்துக்கொண்டார். அதுமாத்திரமின்றி அவரது புதல்வரையும் எமது கட்சிக்காக கொடுத்திருக்கிறார். எமது கட்சியின் ஆலோசகராக தொடர்ந்தும் இருந்துவந்த ஒருவரைத்தான் நாங்கள் இன்று இழந்திருக்கிறோம். அவர் எம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது ஆலோசனைகளும் அனுபவங்களும் எமக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தீர்க்கமுடியாத பல பிரச்சினைகள் பல இருந்துகொண்டிருக்கின்றன. தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்துக்குள் அதனைச் செய்துமுடிப்பது என்பது, ஆசனங்களின் சமன்பாட்டினால் சாத்தியமில்லாமல் போய்விட்டது. அடுத்த தேர்தலின் பின்னர் இதை நிந்தர சுபீட்ச பூமியாக மாற்றுவதற்கு தமிழ், முஸ்லிம் மக்களிடையே இருக்கின்ற புரிந்துணர்வை வளர்ப்பதும், பேரின அரசியல் தலைமைகளிடம் சரியான அணுகுமுறைகளை கையாள்வதற்கும் மன்சூரின் பணிகள் எங்களுக்கு துணையாக அமையும் என்றார்.

கல்முனை மாநகர சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் புதல்வருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேராதனை பல்கலைக்கழக தொழில்துறை தலைவர் பேராசிரியர் எம்.ஏ. நுஹ்மான், தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் உரைகள் நிகழ்த்தியதுடன், ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், கல்முனை மாநகர சபை மேயர் ரக்கீப் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்