136,714 பேருக்கு இம்முறை பல்கலைக்கழக அனுமதி இல்லை
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் நுழைவதற்கான தகுதியினைப் பெற்றுக் கொண்டவர்களில் 01 லட்சத்து 36 அயிரத்து 714 பேர், பல்கலைக்கழக அனுமதியினை இழந்துள்ளனர்.
இம்முறை க.பொ.த. உயர்தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கழகம் நுழைவதற்கான தகுதியினைப் பெற்றவர்களில் 31,158 பேருக்கு மட்டுமே, இலங்கையிலுள்ள 15 பல்கலைக்கழகங்களிலும் அனுமதி வழங்கப்படும் என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2018இல் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 321,462 பேர் தோற்றியிருந்தனர்.
எவ்வாறாயினும் கடந்த 2017ஆம் ஆண்டை விடவும் 645 மாணவர்கள் அதிகமான, இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
கடந்த வருடம் பல்கலைக்கழங்களுக்கு 30,513 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
2017ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 258,415 பேர் தோற்றியிருந்தனர். அந்த வகையில், கடந்த வருடத்தை விடவும் இம்முறை 63,047 பேர் அதிகமாக, க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.