புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை

🕔 January 11, 2019

லங்கை பாதுகாப்புப் படையினர் 37 பேரை கொலை செய்தமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கு, 185 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து அநூராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அநூராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராசதுறை ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு இந்த சிறைத்தண்டனை விதித்துப்பட்டுள்ளது.

185 வருட கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 05 வருடங்கள் கழிக்கும் வகையில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பலாலி விமான நிலையத்திலிருந்து ரத்மலானை நோக்கி பயணித்த அன்டனோ 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தி தாக்கியதால் அதில் பயணித்த பாதுகாப்பு படையின் 37 பேர் கொல்லப்பட்டனர்.

2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராசதுரை ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு எதிராக ஏவுகணை செலுத்திய குற்றச்சாட்டு உள்பட 37 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

எதிரிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எனினும் தமது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்கள் நிராகரித்திருந்தனர்.

விசாரணைகளின் பின்னர் எதிரிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் அறித்தார்.

எனினும் அந்த அறிவிப்பினை ஆட்சேபித்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராசதுரை ஜெகன், மேல்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி வழங்கினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்