கிழக்கு முஸ்லிம் ஆளுநரும், தமிழ்த் தரப்பு எதிர்ப்பும்

🕔 January 10, 2019

– வை எல் எஸ் ஹமீட் –

கிழக்கில் அண்ணளவாக 1/3 பங்கு தமிழர்களும் 2/3 தமிழர் அல்லாதவர்களும் வாழுகின்றனர். கிழக்கின் 1/3 பங்கு தமிழர்களுக்காக தமிழரல்லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்பின்மூலம் வடக்கின் ஆளுகைக்குள் வரவேண்டும். அதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும்; என்பது அவர்களது கோரிக்கை, எதிர்பார்ப்பு.

விடுதலைப் போராட்ட ஆரம்பகாலத்தில், வட கிழக்கு சுயாட்சிக்கும்மேல், தமிழீழத்துக்காகவே போராடுவதற்கு முஸ்லிம் வாலிபர்கள் ஆயுத இயக்கங்களில் இணைந்தார்கள். அந்தளவு ஒன்றுக்குள் ஒன்றாக பிணைந்த சகோதர சமூகமாக தமிழர்களை முஸ்லிம்கள் கருதினார்கள்.

இயக்கப் போராளிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் படைகளிடமிருந்து தப்புவதற்கு அடைக்கலம் கொடுத்தார்கள். ஆகாரமளித்தார்கள். தலைவர் அஷ்ரப் அவர்கள்; “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம் பெற்றுத் தராவிட்டால் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவான்” என்று மேடைகளில் முழங்குமளவு தமிழ்த் தலைமைகள்மீதான நம்பிக்கை இருந்தது.

நடந்தது என்ன? தம்முடன் போராட இணைந்த முஸ்லிம் வாலிபர்களையே சுட்டுத்தள்ளி நீங்கள் வேறு, நாங்கள் வேறு என்று நிறுவினார்கள். போதாக்குறைக்கு வடக்கு முஸ்லிம்களை சில மணித்தியாலங்களுக்குள் வெளியேற்றினார்கள்.

இந்த நாட்டில் யுத்தகாலத்தில் எல்லா சமூகங்களும் பாதிக்கப்பட்டன. ஆனால் யுத்த காலத்திலும் யுத்த நிறுத்த காலத்திலும் தமிழ் ஆயுதப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட, அகோரமாக கொல்லப்பட்ட ஒரு சமூகமென்றால், அது முஸ்லிம் சமூகம்தான். அந்தளவு வெறுப்பு முஸ்லிம்கள் மீது தமிழ் ஆயுதப்போராட்டத்துக்கு.

யுத்த நிறுத்தகாலம். ஆனாலும் முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் அட்டகாசம் குறையவில்லை. ஆயுதப்படைகளும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதில் அசட்டையாக இருந்தன. பொதுமக்களின் நெருக்குதலினால் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி முட்டுக்கொடுத்துப் பாதுகாத்த மு கா தலைவர் ஹக்கீமின் வேண்டுகோளின்பேரில், 500 முஸ்லிம் பொலிஸ்காரர்களை முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக நியமிக்க, அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வந்தார்.

தாங்க முடியவில்லை தமிழ்த்தரப்பிற்கு. தூக்கினார் போர்க்கொடி சம்பந்தன். காற்றில் பறந்துபோனது ரணிலின் வாக்குறுதி. ஆட்சிக்கட்டிலில் ஏற்றி முட்டுக்கொடுத்தும் கையாலாகாத்தனமானவர்களாக விடுதலைப் புலிகளின் கொடுமைகளைக் கண்டு, கண்ணீர் விட்டுக்கொண்டு காலத்தைக் கடத்தினோம்.

யுத்தம் முடிந்தது. அமைதியும் திரும்பியது. கடந்த காலத்தை மறப்போம். தமிழர்களும் முஸ்லிம்களும் சகோதர சமூகங்களாக வாழுவோம் என்றுதான் முஸ்லிம்கள் விரும்பினார்கள்; விரும்புகிறார்கள்.

அவர்களது விடயத்தில் முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும், விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்; முஸ்லிம்களின் விடயங்களில் எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள்?

கிழக்கில் அம்பாறையும் திருகோணமலையும் தமிழ்பேசும் மக்களைப் பெரும்பான்மையாக கொண்ட மாவட்டங்கள். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் எண்ணிக்கையில் முதலாவது பெரிய சமூகம்.

வட கிழக்கு, பெரும்பான்மை சமூக ஆளுகைக்குள் இருந்து விடுபடவேண்டும் என்பது தமிழர்களின் போராட்டம். தேவையானபோது ‘தமிழ்பேசும் மக்கள்’ என்று முஸ்லிம்களையும் தம்முடன் இணைத்துக்கொள்வார்கள். ஆனால் பெரும்பான்மைத் தமிழ்பேசும் மாவட்டங்களான அம்பாறைக்கும் திருகோணமலைக்கும் தமிழ்பேசும் அரச அதிபர்களை நியமிக்கக் கோரமாட்டார்கள், அவர் ஒரு முஸ்லிமாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக. ஆனால் தமிழுக்காக போராடுகிறார்கள்.

இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் இவ்விரண்டு மாவட்டங்களிலும் சிறுபான்மையாக வாழும் சிங்களவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கம் அவர்களின் கைகளில் இருந்தும் சிங்களவர்களையே அரச அதிபர்களாக நியமிக்கவேண்டும் என்பது எழுதாத விதி.

இந்நிலையில் கல்முனைக் கரையோர மாவட்டத்தை முஸ்லிம்கள் கோரி நிற்கிறார்கள். ஆனால் தமிழ்த்தரப்பினர் எதிர்க்கின்றார்கள். ஏன்? முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடுவார்கள் என்பதனால். தமிழர்களா? சிங்களவர்களா? என்றால் அது ‘தமிழர்களே’. சிங்களவர்கள் பேரினவாதிகள் என்பது அவர்களது நிலைப்பாடு. அப்பொழுது ‘ தமிழ்பேசும் சமூகம்’ என்ற பதமும் பாவிக்கப்படும். ஆனால் ஒரு அதிகாரி ‘முஸ்லிமா? சிங்களவரா? என்றால் அவர்களது பதில் ‘சிங்களவர்தான்’ என்பதாகும்.

அப்பொழுது சிங்களவர்கள் ‘ ரத்தத்தின் ரத்தம்’. முஸ்லிம்கள் விரோதிகள். 1987ம் ஆண்டுவரை எதுவித பிரச்சினையுமில்லாமல் இருந்த கல்முனை பட்டின சபை எல்லைக்குள், ஒரு மாநகரசபையை நிறுவுவதற்கு அவர்கள் உடன்பட மாட்டார்கள். ஆனால் சமஷ்டிக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் பிரதேச செயலாளர் இருக்கும் பிரதேச செயலகப்பிரிவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள.; தனியாக பிரதேச செயலகம் வேண்டும். ஆனால் அதி உச்ச அதிகார பகிர்வுக்கு முஸ்லிம்கள் உடன்பட வேண்டும். முஸ்லிம்களையும் சேர்த்து ஆள்வதற்கு இணைப்பிற்கும் உடன்பட வேண்டும்.

ஆளுநர் நியமனம்

வட கிழக்கிற்கு சிங்களவர்தான் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்ற எழுதாத விதி கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்தது. அவ்விதி தகர்க்கப்பட்டு இம்முறை வடக்குக்கு ஒரு தமிழரும் கிழக்குக்கு ஒரு முஸ்லிமும் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்குக்கு ஒரு முஸ்லிம் ஆளுநர் நியமிக்கப்பட்டதை தமிழர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

தமிழுக்காகப் போராடும் தமிழ்த்தலைமைகள், பேரினவாதத்தின் பிடியிலிருந்து தமிழ்பேசும் பிரதேசங்களை விடுவிக்கப்போராடும் தமிழ்த்தலைமைகள் கிழக்குக்கு ஒரு தமிழ்பேசும் மகன் நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை; அவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக. ஆனால் இனவாத சிங்களவரொருவரை நியமித்தாலும் அல்லது தமிழ்ப் போராளிகளை அழித்த – முன்னாள் ராணுவ அதிகாரி அல்லது கடற்படை அதிகாரியை நியமித்தாலும் ஏற்றுக்கொள்வார்கள்; அவர் முஸ்லிமாக இல்லாதவரை.

இனவாதம் எங்கே இருக்கின்றது என்று பாருங்கள். இந்த யதார்த்தத்திற்கு மத்தியில்தான் நம்மவர்களின் நிலை. என்னவென்று சொல்லாமல் புதிய யாப்பில் தமிழர்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமாம் என்று, நம் தலைவர்கள் என்பவர்கள் பேசுகின்றார்கள்.

புதிய யாப்பும் அதிகாரப்பகிர்வும்

அதிகாரப் பகிர்வு முஸ்லிம்களுக்கு சாதகமா? பாதகமா? என்பதிலேயே பலருக்கு குழப்பம். இதில் குழம்ப என்ன இருக்கிறது?

அதிகாரப்பகிர்வு எதற்கு? பதில்: ஆட்சி செய்வதற்கு.

யார் ஆட்சி செய்வதற்கு? பதில்: அந்தப் பிரதேசத்தில் யார் அல்லது எந்த சமூகம் பெரும்பான்மையாக இருக்கின்றதோ அவர்கள் ஆட்சி செய்வதற்கு.

யாரை ஆள்வதற்கு? பதில்: தம்மைத்தாமே ஆள்வதற்கும் அங்குள்ள சிறுபான்மையை ஆள்வதற்கும்.

தமிழர்கள் எதற்காக அதிகாரம் கேட்கிறார்கள்? பதில்: வட கிழக்கில் தம்மைத்தாமே ஆள்வதற்கும் அங்குள்ள சிறுபான்மைகளை ஆள்வதற்கும்.

வடக்கில் மட்டும்தானே தமிழர்கள் பெரும்பான்மை? பதில்: ஆம். கிழக்கில் அவர்கள் சிறுபான்மை. தமிழர் அல்லாதவர் பெரும்பான்மை. ஆனால் தமிழர் கிழக்கிலும் ஆளப்படும் சமூகமாக இருக்கக்கூடாது. எனவே இணைப்பைக் கோருகிறார்கள். அதாவது கிழக்கின் தமிழரல்லாத பெரும்பான்மையினர் இணைப்பின் மூலம் சிறுபான்மையாக மாறி ஆளப்பட வேண்டுமென்கிறார்கள்.

கிழக்கிற்கு வெளியேயுள்ள எட்டு மாகாணங்களில் முஸ்லிம்களின் நிலை என்ன?
பதில்: எட்டு மாகாணங்களிலும் முஸ்லிம்கள் தெளிவான சிறுபான்மை. ஆளப்படப்போகின்ற சமூகம். சமூகம் ஆளப்படுவதற்காக அதிகப்பட்ச ஆதகாரப் பகிர்வைக் கோரி நிற்கின்ற பெரும் தலைவர்களைக் கொண்ட சமூகம்.

ஓர் அரசாங்கத்தின்கீழ் இருந்துகொண்டே, எமது பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. எமது இன்னோரன்ன உரிமைக்ளுக்குப் பாதுகாப்பில்லை என்று அழுது புலம்பி ஒரு ஆட்சியை மாற்றி, வந்த ஆட்சியும் பாதுகாப்புத்தராமல் திகனயில் உயிர், பொருள் இழந்த சமூகம்.

அந்த சமூகம் எட்டு அரசாங்கங்களால், அதுவும் அதிகப்பட்ச அதிகாரம்கொண்ட அரசாங்கங்களால், அதிலும் மத்திய அரசாங்கம் என்னவென்றும் கேட்கமுடியாத சமஷ்டித்தன்மைகொண்ட அரசாங்கங்களால், அதிலும் குறிப்பாக பொலிஸ் அதிகாரமும் சேர்த்து வழங்கப்படுகின்ற அரசாங்கங்களால் மறுபுறம் நாம் அடியோடு பிரதிநிதித்துவப் படுத்தாத ( ஊவா, சப்ரகமுவ, தெற்கு) அல்லது சொல்லும்படியான பிரதிநிதித்துவம் இல்லாத ( வடக்கு, வடமத்தி) மற்றும் ஓரளவு பிரதிதித்துவத்தை மாத்திரம்கொண்ட ( மேற்கு, மத்தி, வடமேற்கு) அரசாங்கங்களால் அதிலும் குறிப்பாக மத்திய அரசின் பிரதிநிதியான அதிகாரம் கொண்ட ஆளுநரின் பல்லுப் பிடுங்கப்பட்ட, அந்த ஆளுநரைக் கொண்டு மத்திய அரசு தலையிட முடியாத அரசாங்கங்களால் நாங்கள் ஆளப்படுவதற்கு, அதிகாரப்பகிர்வு கேட்கும் முஸ்லிம் தலைவர்களைக்கொண்ட சமூகம் நாம். இதுதான் எட்டு மாகாணங்களில் நமதுநிலை.

கிழக்கில் நாம் சிறுபான்மை இல்லையே. கிழக்கில் அதிகாரப்பகிர்வு நமக்கு சாதகமில்லையா? நமது காணிகளும் பறிபோகின்றனவே. காணி அதிகாரம் கிடைத்தால் பாதுகாக்க முடியாதா?

பதில்: நாம் சிறுபான்மை இல்லைதான். ஆனால் நாம் தனிப் பெரும்பான்மையும் இல்லையே. ஆளுவதாக இருந்தால் கூட்டாட்சி. கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்களை ஆக்கிரமிக்கும் சக்தி பேரினவாதமென்றால் கிழக்கில் சிற்றினவாதம்.

முஸ்லிம் முதலமைச்சர் வேண்டுமென்று போராடினோம். கூட்டாட்சியில் பெற்றோம். என்ன செய்ய முடிந்தது. ஒரு சாதாரண வீதிக்கு பெயர் மாற்றம் செய்ய முடியாத முஸ்லிம் முதலமைச்சர் பதவி. ஏன் முடியவில்லை? தமிழ்த்தரப்பினர் விரும்பவில்லை.

இதன்பொருள் முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றாலும் அவர் கூட்டாட்சியில் பொம்மை முதலமைச்சர். தமிழ்தரப்பு எதிர்க்காத விடயங்களை மாத்திரம்தான் செய்யலாம். கிழக்கில் எங்கள் பிரச்சினைகளில் பாதிக்குமேல் தமிழர்களுடன் பின்னிப்பிணைந்தவை. தீர்க்க விடுவார்களா? கடற்கரைப்பள்ளி வீதி பெயர்மாற்ற விவகாரம் மத்திய அரசாங்கத்திடம் அதிகாரம் இருந்திருந்தால் சிலவேளை எப்போதோ செய்திருக்கலாம். இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்றதாகும்.

சிலவேளை முஸ்லிம்கள் இல்லாமல் பேரினவாதமும் சிற்றினவாதமும் இணைந்து கிழக்கில் ஆட்சியமைத்தால் ( அதிகப்பட்ச அதிகாரம், பொலிஸ் அதிகாரம் வழங்குகின்றபோது) நிலைமையைச் சிந்தித்துப்பாருங்கள்.

காணி அதிகாரம் கிடைத்தால் எமது காணிகளைப் பாதுகாக்கலாமா?

எமது காணிப்பிரச்சினை இருபுறமும் இருக்கின்றது. உதாரணம் சம்மாந்துறை கரங்கா காணி. இவை உறுதிக்காணிகள். இவற்றிற்கும் காணி அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு. ராணுவம் கையகப்படுத்திய காணி. அரசாங்கம் ஒரு உத்தரவிட்டால் நாளையே வெளியேற்றலாம்.

யுத்தம் நடந்த பூமியான வடக்கிலேயே ராணுவம் காணிகளை விடுவிக்கும்போது நாம் கையாலாகதவர்களாக இருக்கின்றோம். காணி அதிகாரம் எங்கே பயன்படும் என்றால் அரச காணிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் விடயத்தில். அங்கு சிங்களவர்களைக் குடியேற்றுவதைத் தடுப்பதற்கு. உறுதிக்காணிக்கும் அதற்கும் என்ன தொடர்பு.

அஷ்ரப் நகர். ராணுவ ஆக்கிரமிப்பு. அங்கு இப்பொழுது யுத்தமா நடக்கிறது ராணுவம் நிலைகொள்ள. மாகாணசபைக்கு காணி அதிகாரம் வழங்கினால் ராணுவத்தை வெளியேற உத்தரவிடமுடியுமா? ஒன்பது மாகாணமும் அவ்வாறு உத்தரவிட்டால் ராணுவத்தை வெளிநாட்டிலா கொண்டுபோய் வைப்பது? எனவே, ராணுவ விவகாரங்களில் மாகாணசபை தலையிடமுடியாது. ஆனால் நம்பவர்களின் நாக்கில் பலம் இருந்தால் மத்திய அரசின் ஒரு உத்தரவின் மூலம் வெளியேற்றலாம்.

வட்டமடு காணி: யாருடன் இணைந்த பிரச்சினை – தமிழர்களுடன் இணைந்த பிரச்சினை. கூட்டாட்சியில் தீர்வுகாண விடுவார்களா? மட்டக்களப்பில் 15000 ஏக்கர் முஸ்லிம்களின் காணி – விடுதலைப்புலிகளின் காலத்தில் கையகப்படுத்தப்பட்டு இன்னும் தமிழர்களின் ஆதிக்கத்தில் இருக்கின்றது. தீர்வுகாண விடுவார்களா? இதுவரை தீர்த்திருக்க வேண்டியவை. நமது மேடைப்பேச்சு வீரர்களின் இயலாமை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1/4 பங்கு முஸ்லிம். 1/20 பங்கு நிலம்கூட அவர்களுக்கு இல்லை. காணிகள் எல்லாம் தமிழ் பிரதேசங்களில். காணி அதிகாரம் வழங்கப்பட்டால் குடியேற அனுமதிப்பார்களா? இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹிஸ்புல்லாவினால் கட்டப்படும் பல்கலைக் கழகம்; கல்வியில் மாத்திரமல்ல மட்டக்களப்பு முஸ்லிம்களின் குடியேற்றப்பரம்பலிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றது. மாகாண சபையிடம் காணி அதிகாரம் இருந்திருந்தால் அனுமதித்திருப்பார்களா?

எனவே, கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரத்தைக் கொடுத்தால் இவற்றையெல்லாம் சாதிக்கலாம் என யாராவது பட்டியலிட முடியுமா?

மாகாண அதிகாரம் மத்திய அரசிடம்

அதிகாரப்பகிர்வு இல்லாமல் மத்திய அரசிடம் அதிகாரம் இருக்குமானால் முஸ்லிம் பிரதேசங்களில் நடைமுறை அதிகாரம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், அமைச்சர்களிடம்தான் இருக்கப்போகின்றது. கிழக்கு உள்ளக நிர்வாகத்தைப் பொறுத்தவரை பேரின அரசாங்கம் பெரிதாக அக்கறை செலுத்தப்போவதில்லை. எனவே, நமது பிரதிநிதிகள்தான் அங்கு யதார்த்த ஆட்சியாளர்கள். இதுதான் 90இற்கு முதல் இருந்தது.

எனவே, அதிகாரப்பகிர்வினால் கிழக்கில் பாரிய நன்மைகளை நாம் அடையப்போவதில்லை. ஆனால் நிறையப் பிரச்சினைகளைச் சந்திக்கப்போகின்றோம்.

எனவே, ஆளமுடியாத நாம் எதற்காக அதிகாரம் கேட்கின்றோம். சிலர் தனியலகு என்கின்றனர். அது நல்ல விடயம். மறுக்கவில்லை. நம்மை நாம் ஆளும் கோட்பாடு. ஆனால் நடைமுறைச் சாத்தியமா? சாத்தியம் என்பவர்கள் விளக்குங்கள். இது தொடர்பாக நான் ஏற்கனவே விரிவான ஆக்கங்களை எழுதியிருக்கின்றேன்.

மறைந்த தலைவர் தனிஅலகு கேட்டார். அதுதான் தீர்வு என்பதனாலா கேட்டார். அன்று, என்றுமே பிரிக்க முடியாது என்ற தோற்றத்தில் வட கிழக்கு இருந்தபோது மாற்றுவழியின்றி கேட்டார். Something is better than nothing என்பதுபோல்.

எரிகின்ற வீட்டில் பிடிங்கியவரை லாபம்தான். அதற்காக யாராவது வீட்டை எரித்து எதையாவது பிடுங்குவோம் என்பார்களா? இது புரியாமல் பிரிந்திருக்கும் வடக்கு, கிழக்கை இணைத்துவிட்டு தனிஅலகு தாருங்கள் என்கிறார்கள். தனிஅலகு கிடைத்திருந்தால் ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் அந்த இடத்தில் சாத்தியப்பட்டிருக்குமா? அல்லது எதிர்காலத்தில் அங்கு குடியேற்றம்தான் சாத்தியப்படுமா?

எனவே, வெறுமனே மொட்டையாக அதிகாரப்பகிர்வை ஆதரிப்பவர்கள் கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கு வழிசொல்லுங்கள். கிழக்கில் எந்தவகையில் அது முஸ்லிம்களுக்கு பிரயோசனம் என விரிவாக விளக்குங்கள்.

இந்து கலாச்சார அமைச்சராக ஒரு சிங்களவரை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை உள்ளவர்கள் ஒரு பிரதி அமைச்சர் முஸ்லிம் என்பதனால், ஓரத்தில் இந்து கலாச்சாரம் என்றொருசொல் ஒட்டிக்கொண்டதை பொறுக்க முடியாதவர்கள், ஆளுவதற்கு அதிகாரம் கேட்கின்றார்கள் என்பதற்காக, ஒரு அரசாங்கத்தால் ஆளப்படுவதற்கு அவர்கள் ஆயத்தமில்லை என்பதற்காக, ஒன்பது அரசாங்கங்களால் ஆளப்படுவதற்கு நாம் சம்மதம் என்றால், எம்மை என்னவென்பது? எம்மைவிட சிந்திக்க முடியாத சமூகம் இருக்கமுடியுமா?

அவர்கள் வாழவேண்டும் என்பதற்காக நாங்கள் அழிய வேண்டுமா? அவர்கள் ஆளவேண்டும் என்பதற்காக, நாம் அரசியல் அடிமைச் சமுகமாக மாறவேண்டுமா? பதுளையில் தீவைத்தால், முஸ்லிம்களின் உயிர்களுக்கு உலை வைத்தால் ஜனாதிபதியிடமும் பேசமுடியாது; பிரதமரிடமும் பேசமுடியாது. அதிகாரம்பொருந்திய முதலமைச்சரை தேடிச்செல்லும் நிலைக்காகவா ஆதிகாரப்பகிர்வை ஆதரிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அதிகபட்ச அதிகாரப்பகிர்வை ஆதரிக்கமுடியுமா? எனவே சிந்தியுங்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்