வாகனங்கள் மீது புதிதாக காபன் வரி: எப்படி அறவிடப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

🕔 January 10, 2019

– அஹமட் –

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் தவிர ஏனைய வாகனங்கள் அனைத்தின் மீதும், இந்த வருடம் ஜனவரி 01ஆம் திகதி முதல், ‘காபன்’ (புகை) வரி விதிக்கப்படுவதாக, மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த வரி அறவிடப்படவுள்ளது.

‘காபன்’ வரி எவ்வாறு விதிக்கப்படும்

‘காபன்’ வரி எவ்வாறு விதிக்கப்படும் என்பதில் பலருக்கும் தெளிவின்மை உள்ளதைக் காண முடிகிறது. எனவே, அது குறித்த விளக்கமொன்றினை வழங்குகின்றோம்.

இந்த வரியானது வாகனங்களின் சிசி (CC) யினையும், அவற்றின் வயதினையும் (வருடங்களையும்) பொறுத்து அமையும்.

05 வருடங்களுக்குட்பட்ட வாகனங்களுக்கு, ஒரு சிசி (CC) க்கு 50 சதம் வீதம், காபன் வரி அறவிடப்படும்.

உதாரணமாக, உங்களிடமிருக்கும் மோட்டார் பைக் 150 சிசி என்றும், அதை புதிதாக நீங்கள் வாங்கி, 05 வருடங்களுக்குள்தான் ஆகிறது என்றும் வைத்துக் கொள்வோம். அந்த மோட்டார் பைக்குக்கான காபன் வரியாக நீங்கள் 75 ரூபாவை செலுத்த வேண்டும்.

அதேபோன்று, 05 தொடக்கம் 10 வயதுக்குட்பட்ட வாகனங்களுக்கு, ஒரு சிசி (CC) க்கு 01 ரூபா வீதம் செலுத்த வேண்டும்.

10 வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு ஒரு சிசி (CC) க்கு 1.50 சதம் வீதம் காபன் வரியாக செலுத்த வேண்டும்.

ஆனால், ஹைபிரிட் வாகனங்களுக்கு, மேலுள்ள கணக்கில் அரைவாசி செலுத்தினால் போதுமானதாகும்.

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு காபன் வரி இல்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்