வடக்கு, கிழக்கு ஆளுநர் நியமனங்கள் வரவேற்கத்தக்கவை; ஜனாதிபதிக்கும் நன்றி சொல்கிறார் ஹசன் அலி
– மப்றூக் –
தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அவர்களின் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் முதன்முறையாக ஆளுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதோர் முன்னேற்றமாகும் என்றும், அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி பாராட்டுவதாகவும், ஐக்கிய மக்கள் சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
“நாட்டில் மாகாண சபை ஆட்சிமுறை 1987ல் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடங்கி இன்று வரையிலான கடந்த 31 வருடங்களாக, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே இப்பதவிகளில் அமர்த்தப்பட்டு வந்துள்ளனர்.
அந்த நிலமை தற்போது மாறுபட்டுள்ளதனை நோக்கும்போது நம்பிக்கையூட்டும் புதியதோர் அத்தியாயம் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவே ஐக்கியசமாதான கூட்டமைப்பு கருதுகின்றது” எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
“நம் நாட்டில் வாழும் சகல இனங்களினதும் சம்மதத்துடன் முழுமையானதோர் அரசியல் யாப்பானது சட்ட ரீதியாக நிறைவேற்றப்பட்டு அமுலுக்குவரும் வரை, சிறுபான்மை இனங்களின் வாழ்வுரிமை, தனித்துவ அடையாளம், இருப்பு என்பனவற்றைப் பாதுகாத்துக் கொள்ளவும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் வேண்டியுள்ளது.
அதற்குத் தேவையான 22 முக்கிய அம்சங்களை இடைநிலை காப்பீடாக அடையாளம் கண்டு, அவற்றை அண்மையில் காத்தான்குடியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர்மா நாட்டில் நிறைவேற்றியிருந்தோம்.
அவற்றில் 12ம் மற்றும் 13ம் தீர்மானம்கள், வடக்கு – கிழக்கு மாகாண சபை நிர்வாக நடைமுறை சம்பந்தப்பட்டவையாகும்.
அந்த வகையில், வடக்கு – கிழக்கிலுள்ள தமிழ்பேசும் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களினதும், மாவட்டங்களினதும் ஆளுனர்களும், மாவட்ட செயலாளர்களும் சரளமாகத் தமிழ் பேசுபவர்களாகவே இருக்க வேண்டும். வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் பெரும்பான்மையாக பாரம்பரியமாக வாழ்ந்துவரும் சாதாரண குடிமக்கள் தங்களது பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளைப்பற்றி உயர் அதிகாரிகளுடன் சரளமாக உரையாடி நேரடியாக பரிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் அடிப்படை உரிமை தற்போது அவர்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 70 வருடங்களாகத் தொடர்ந்துவரும் இந்நிலமை களையப்பட்டு அடக்குமுறையிலிருந்து சிறுபான்மை தமிழ்பேசும் மக்கள் விடுவிக்கப்படவேண்டும் என, எமது கட்சியின் பேராளர் மாநாட்டின் 12ஆவது தீர்மானம் அமைந்திருந்தது.
அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாண நிர்வாகங்களிலுள்ள உயர்நிலை அரச மற்றும் திணைக்களப் பதவிகள் அனைத்தும், அந்தந்த மாகாணங்களில் வாழும் சமூகங்களின் இனப்பரம்பலுக்கு ஏற்ப பங்கிடப்படவேண்டும். மேலும் மிகவும் உயர்ந்த தகைமைகளையும் தராதரங்களையும் கொண்டுள்ள சிறுபான்மை சமூகத்தினர் தங்களது சொந்த மாகாண மற்றும் மாவட்ட நிர்வாகங்களில் உரிய பதவி நிலைகளில் அமர்த்தப்படாமல் அவர்களது தகைமைகளுக்குக் குறைந்த பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுவதனைநாம் கண்டிக்கின்றோம். எனவே, பாகுபாடான நியாயமற்ற இவ்வாறான உரிமை மீறல்கள் உடனடியாகக் களையப்படவேண்டும் என்று, 13ஆவது தீர்மானம் அமைந்திருந்தது.
இவ்விரண்டு தீர்மானங்களும் முறையாக கடைப்பிடிக்கப்படும் பட்சத்தில், தமிழ் பேசும் இரு சமூகங்களும், நமது மாகாணங்களில் சிறுபான்மையாக உள்ள சிங்களம் பேசும் சமூகமும், நமது பாரம்பரிய தாயகத்தில், நிம்மதியாக வாழமுடியும் என்பது எமது நம்பிக்கையாகும்” என்றார்.