தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50 வீதமானோர், கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்கள்
கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்லியடைந்த 14 பேர், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 29 பேர் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், தற்போது நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சுமார் 50 வீதமான தேசியப்பட்டியல் உறுப்பினர்கள், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களாவர்.
குருணாகல் மாவட்டத்திலிருந்து 2015ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சாந்த பண்டார, நேற்றைய தினம் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்தே, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இவ்வாறு தோல்லியடைந்தவர்கள் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தேசியப்பட்டியல் உறுப்பினராக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் சரத் பொன்சேகா – அவரின் சொந்தக் கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதேபோன்று, திருகோணமலை மாவட்டத்தில் தோல்வியடைந்த எம்.எஸ். தௌபீக், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று ஜே.வி.பி. சார்பாக கடந்த நாடாமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவாகாமல் போன சுனில் ஹந்துநெத்தி – அந்தக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த கே. துரைரத்ன சிங்கம் மற்றும் சாந்தி சிறீஸ்கந்தராசா ஆகியோரும், அந்தக் கட்சியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.