எவ்வளவுதான் வடிக்கட்டிப் பார்த்தாலும், மிருகங்களின் எச்சம் நீருடன் வருகிறது; லோகி தோட்ட மக்களின் துயரம்

🕔 September 23, 2015

Water issue - 001
– க.கிஷாந்தன் –

லவாக்கலை லோகி தோட்ட பிரிவில் ஒன்றான, மிட்டில் டிவிசன் பகுதி மக்களுக்கு கிடைக்கும் குழாய் வழி குடிநீரானது, அசுத்தமடைந்த நிலையில் கிடைப்பதாக, அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நீரை பருகுகின்றவர்களின் உடலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதாகவும், குறித்த நீரை, எவ்வளவுதான்  வடிக்கட்டினாலும், மணல் மற்றும் மிருகங்களில் எச்சங்கள் நீரில் காணப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

மிட்டில் டிவிசன் பகுதியில் வாழும் சுமார் 150 குடும்பங்களை சேர்ந்த மக்கள் ஒவ்வொரு நாளும்   அசுத்தமடைந்த நீரைப் பெறுகின்றமையினால்,  பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வனப் பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர்  தெலைவிலிருந்தே, குழாய்கள் மூலம் இம்மக்களுக்கு  நீர் கொண்டு வரப்படுகின்றது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள நீர்தாங்கிகள் உடைந்து சுத்தம் செய்யப்படாத நிலையில், சேறும் சகதியுமாக, மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன.

இதேவேளை, நீர் தாங்கிகளின் மேற்பகுதிகளில் பாதுகாப்பு மூடிகள் இடப்படாமையினால் விலங்குகள்  மற்றும் பறவைகளின் எச்சங்கள் தாங்கியினுள் விழுவதாகவும், இந்த நீரையே மக்கள் பருகுவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

மழை காலங்களில் கிடைக்கும் தண்ணீரானது, சேறும் சகதியுமாக மஞ்சள் நிறத்துடன்  கலங்கிய நிலையில் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நீரை பருகுவதால், சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவதோடு, நீரைப் பருகுவோரின் உடலில் அடிக்கடி அரிப்பு நோய் ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.Water issue - 002Water issue - 003

Comments

புதிது பேஸ்புக் பக்கம்