கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்படுவதற்கு, தமிழ் தலைமைகளின் முடிவுளே காரணம்: வியாழேந்திரன்

🕔 January 5, 2019

 மிழ் தலைமைகள் தொடர்ச்சியாக எடுத்த முடிவுகளே, கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்துக்கு காரணம் என்று, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக, ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு அபிவிருத்தி அமைச்சை தான் எடுத்தபோது துள்ளி குதித்து துரோகிப் பட்டம் சூட்டும் அளவுக்குச் சென்றதாகவும், இன்று, ஊருக்கு ஒரு அமைச்சர் என்ற நிலை, முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது முஸ்லிம்களின் அரசியல் சாணக்கியம் என்றும், இந்த நாட்டை யார் ஆண்டாலும், தங்கள் இனத்தை வாழ வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம்கள் ராஜதந்திரமாகச் செய்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அபிவிருத்திக்காக முஸ்லிம்கள் போராடி எந்த உரிமையையும் இழக்கவில்லை. ஆனால் கிழக்கில் தமிழ் மக்களின் நிலை இரண்டுமற்ற நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற அரசியல் நெருக்டியை அடுத்து, ஜனாதிபதி எடுத்த தீர்மானங்களுக்கு, தமிழ் தலைமைகள் முட்டுக்கட்டையாக இருந்தனர். அதிலும், ஜனாதிபதி, தன்னுடைய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாவிடினும் எதிர்க்க வேண்டாம் என்று கூறியும், தமிழ் தலைமைகள் அதனை எதிர்த்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒருவேளை இதன் பிரதிபலிப்பாகவே, இன்று ஜனாதிபதி இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுத்தாரா அல்லது சு.கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நிலையில், அப்பதவியை வழங்கினாரா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உண்மையிலேயே, இன்று கிழக்கு தமிழர்களின் இருப்பு என்பது,  கேள்விக்குள்ளான நிலையிலேயே உள்ளது. இதற்கு, தமிழ்த் தலைமைகளே பதில் சொல்ல வேண்டும்.

தேசியம், தேசியம் என்று மாத்திரம் பேசிக்கொண்டிருந்தால் அது எமது மக்களுக்கு முழுமையான தீர்வை தராது. உரிமை சார்ந்த அரசியலுடன், எமது மக்கள் தினமும் அனுபவிக்கும் பிரச்சினைகள் குறித்து சிந்திக்கவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கில் இன்று எத்தனையோ அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அவை தமிழர்களுக்குக் கிடைப்பது என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருந்துள்ளது. இதை எவ்வாறு எமது மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.

எது எப்படியோ, ஆளுநர் நியமன விடயத்தில் ஜனாதிபதிக்கு முழு அழுத்தத்தைக் கொடுத்து, கிழக்கு மக்களின் இருப்பைக் காப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(நன்றி: தமிழ் மிரர்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்